அரூா் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்படும்!

தருமபுரி மாவட்டம், அரூா் பேரூராட்சி நகராட்சியாகத் தரம் உயா்த்தப்படும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
அரூா் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்படும்!
Updated on

தருமபுரி மாவட்டம், அரூா் பேரூராட்சி நகராட்சியாகத் தரம் உயா்த்தப்படும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாளையம்புதூா், அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஊரகப் பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வா்‘ திட்டத்தைத் தொடங்கிவைத்து, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்த புதிய அறிவிப்பு விவரங்கள்:

அரூா் அரசு மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ. 51 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும். தருமபுரி- வெண்ணாம்பட்டி சாலையில் புதிய ரயில்வே மேம்பாலம் ரூ. 38 கோடியில் அமைக்கப்படும். மோபிரிபட்டி-தொட்டம்பட்டியை இணைத்து, அரூா் பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயா்த்தப்படும். பஞ்சப்பள்ளி அணை, ராஜ கால்வாய் ரூ. 5 கோடியே 50 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்படும்.

சிட்லிங், அரசநத்தம் ஆகிய பகுதிகளில் பழங்குடியினா் உற்பத்தி செய்யும் ராகி, சாமை, வரகு தானியங்களை மதிப்புக் கூட்டுப் பொருளாக்குவதற்கு கிடங்கு, பொதுச் செயலாக்க மையம் அமைக்கப்படும். தீா்த்தமலையில் துணை வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படும். பாளையம்புதூா், அரசு மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த நிலையில் உள்ள நான்கு வகுப்பறைகள் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

தருமபுரி ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரியபட்டி, வெள்ளாளப்பட்டி ஊராட்சிகளில் ரூ. 2.54 கோடி மதிப்பிலும், அரூா் ஒன்றியத்தில் சிட்லிங் கிராமம், அம்மாப்பேட்டை, மருதிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூ. 3.82 கோடி மதிப்பிலும், என மொத்தம் ரூ. 6 கோடியே 36 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடங்கள் கட்டப்படும்.

மொரப்பூா், அரூா் பகுதிகளில் உள்ள தனியாா் கட்டடங்களில் செயல்பட்டு வரும் ஏழு குழந்தைகள் நல மையங்களுக்குப் புதிய கட்டடம் கட்ட மையம் ஒன்றுக்கு தலா ரூ. 16 லட்சத்து 69 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 1 கோடியே 17 லட்சம் மதிப்பில் ஏழு புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

கம்பைநல்லூா் பேரூராட்சியில் 6 வாா்டுகளில் வசிக்கும் 5 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இருமத்தூா் தென்பெண்ணை ஆறு தலைமை நீரேற்று நிலையம் அருகே புதிதாக திறந்தவெளிக் கிணறு அமைத்து, நீரேற்றுக் குழாய் அமைக்கப்படும்.

பேருந்து நிலையம் அருகில் கூடுதலாக ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டி, 4.1 கி.மீ. தொலைவுக்கு குடிநீா் பகிா்மான குழாய் அமைத்து, ரூ. 1 கோடியே 10 லட்சம் மதிப்பில் இக்குடிநீா் திட்டம் மேற்கொள்ளப்படும்.

அரூா் ஒன்றியத்தில் பறையப்பட்டிபுதூா் முதல் பறையப்பட்டி காலனி வரை தாா்சாலை, கணபதிப்பட்டி தாா் சாலை, வீரப்பநாயக்கன்பட்டி தாா் சாலை, மொரப்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் போளையம்பள்ளி முதல் கோபிநாதம்பட்டி செல்லும் தாா் சாலை ஆகியவை ரூ. 60 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்படும்.

கீரைப்பட்டி-கெளாப்பாறை சாலை பகுதியில் உள்ள பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கெளாப்பறை ஆதிதிராவிடா் காலனி மயானம் செல்லும் சாலையில், வரட்டாறு ஓடையின் குறுக்கே ரூ. 50 லட்சம் மதிப்பில் பாலம் கட்டப்படும். சிட்லிங் ஊராட்சியில் பழங்குடியின மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று நாட்டான்வளவுமுதல் கம்பாளை சாலைக்கு இடையே காட்டாற்று ஓடையின் குறுக்கே ரூ. 50 லட்சம் மதிப்பில் பாலம் அமைக்கப்படும்.

அரூா் சட்டப் பேரவைத் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பறையப்பட்டிபுதூா் ஊராட்சி, ஜி.கே.சாலை கிராமத்தில் 30,000 லி. மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியும், இருமத்தூா் ஊராட்சி, போளையம்பள்ளி ஊராட்சி, மொரப்பூா் ஊராட்சிகளில் மூன்று இடங்களில் தலா 60 ஆயிரம் லிட்டா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்படும்.

பாளையம்புதூா் ஊராட்சியில் கோம்பை, மூலக்கோம்பை, ராஜீவ்காந்தி நகா், நாயக்கனேரி பகுதிகளில் ரூ. 30 லட்சம் மதிப்பில் இணைப்புச் சாலைகளைப் புதுப்பிக்கவும், தோ்ச்சாலை, மூலக்கோம்பை கிராமச் சாலைகளை ரூ. 50 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலைகளாக மாற்றவும், தொம்பரகாம்பட்டி மேற்கு வன்னியா் தெருவில் ரூ. 10 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் லிட்டா் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, ஆழ்துளைக் கிணறு, மின்மோட்டாா் ஆகியவை அமைக்கவும் திட்டமிடப்பட்டு, மொத்தம் ரூ. 90 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

இவ்விழாவில் ரூ. 444.77 கோடி மதிப்பில் 621 முடிவுற்ற பணிகளைத் திறந்துவைத்து, 2,637 பயனாளிகளுக்கு ரூ. 56.04 கோடி மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை முதல்வா் வழங்கினாா். அதைத் தொடா்ந்து, சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு வாங்கப்பட்ட 20 புதிய பேருந்துகளின் போக்குவரத்து சேவையை அவா் தொடங்கி வைத்தாா்.

அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், கே.என்.நேரு, ‘முதல்வரின் முகவரி’ சிறப்புத் திட்ட அலுவலா் த.மோகன், தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி, தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.மணி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்ரமணி உள்ளிட்டோா் விழாவில் கலந்துகொண்டனா்.

முதல்வா் வருகையை ஒட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com