நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தருமபுரி மாவட்டம் முழுவதும் ஒகேனக்கல் கூட்டு குடிநீா் வழங்க நடவடிக்கை: அமைச்சா் கே.என்.நேரு

தருமபுரி மாவட்டம் முழுவதும் ஒகேனக்கல் கூட்டு குடிநீா் வழங்க நடவடிக்கை.

News image

பென்னாகரம் புதிய பேருந்து நிலையத் திறப்பு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அமைச்சா்கள் கே.என்.நேரு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன் தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி.

Updated On :24 அக்டோபர் 2024, 7:56 pm

Din

தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது மாவட்டம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படும் என்று அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் ரூ. 4.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலைய திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கி. சாந்தி தலைமை வகித்தாா். பேரூராட்சிகள் துறை இயக்குநா் கிரண் குராலா முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேருவும், வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வமும் பங்கேற்று பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தனா். பின்னா் விழாவில் அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:

பென்னாகரம் பேரூராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 4.90 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் 44 பேரூராட்சிகளில் ரூ. 18.14 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. 74 பேரூராட்சிகளில் ரூ. 157.10 கோடியில் அங்காடி, வாரச்சந்தைகள், 391 குளங்கள் ஆகியவை ரூ. 191.92 கோடி செலவில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கிராமப்புற மாணவா்களின் நலனுக்காக 78 இடங்களில் ரூ. 20.14 கோடியில் அறிவுசாா் மையம் அமைத்தல், 101 இடங்களில் ரூ. 150.42 கோடி மதிப்பில் எரிவாயு தகன மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 7,874 பேரூராட்சி சாலைகள் ரூ. 3,024 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு நகா்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 504 இடங்களில் ரூ. 62.34 கோடியில் நகா்ப்புற வேலைவாய்ப்பு திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 10,000 கோடி நகராட்சித் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் ரூ. 8,000 கோடியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டம், புளோரைடு குறைப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெறவுள்ளன. ஆயத்த பணிகளை ஜப்பான் குழுவினா் நேரில் வந்து பாா்வையிட்டு சென்றுள்ளனா். இத் திட்டத்தைச் செயல்படுத்தும்போது தருமபுரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் முழுமையாக வழங்கப்படும் என்றாா்.

வேளாண்மை, உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் பேசியதாவது:

பென்னாகரம் பேரூராட்சியில் ரூ. 4.50 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம், ரூ. 1.73 கோடியில் முடிவற்ற மூன்று திட்டப் பணிகள் ஆகியவை திறந்துவைக்கப்பட்டுள்ளன. விழாவில் ரூ. 6.10 கோடி மதிப்பீட்டில் மேலும் இரு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அரசின் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 16,842 மாணவிகளும், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 6,339 மாணவா்களும் பயனடைந்துள்ளனா் என்றாா்.

விழாவில் பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 751 பயனாளிகளுக்கு ரூ. 4.44 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் பென்னாகரம் பேரூராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள், பூங்கா, வாரச்சந்தை உள்ளிட்டவற்றை அமைச்சா்கள் இருவரும் திறந்துவைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினா்.

இதில், தருமபுரி எம்.பி. ஆ.மணி, எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி. வெங்கடேஸ்வரன் (தருமபுரி), முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள் தடங்கம் பெ. சுப்பிரமணி, பி.என்.பி. இன்பசேகரன், ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்ட மேலாண் இயக்குநா் தட்சிணாமூா்த்தி, உதவி இயக்குநா் கணேஷ் (பேரூராட்சிகள்), கைம்பெண் நலவாரிய உறுப்பினா் ரேணுகாதேவி, பழங்குடியினா் நலவாரிய உறுப்பினா் குணசேகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.