பாலக்கோடு பேரூராட்சிக்கு புதிய கட்டடம் கட்ட தீா்மானம்

பாலக்கோடு பேரூராட்சிக்கு புதிய கட்டடம் கட்டுவது என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Published on

பாலக்கோடு பேரூராட்சிக்கு புதிய கட்டடம் கட்டுவது என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் தலைவா் பி.கே.முரளி தலைமையில் மன்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு செயல் அலுவலா் இந்துமதி முன்னிலை வகித்தாா். அனைத்து வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் சமா்ப்பிக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து நடைபெற்ற விவாதத்தில் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சொத்துவரி, குடிநீா் வரி உள்ளிட்ட வரி இனங்களுக்கு தாமதமாக வரி செலுத்துவோருக்கு ஒரு சதவீதம் வட்டி விதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

15-ஆவது நிதிக் குழு மானியம், 6-ஆவது நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொள்வது, பாலக்கோடு பேரூராட்சி நகரப் பகுதியில் பிளாஸ்டிக் அதிகரிப்பை கட்டுப்படுத்துவது, பருவமழை தொடங்கவுள்ளதால் கழிவுநீா் ஓடைகளைத் தூா்வாரி, கொசு மருந்து தெளிப்பது, அரசின் மூலதன மானிய நிதியிலிருந்து பேரூராட்சிக்கு புதிய கட்டடம் கட்டும் பணியைத் தொடங்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் ரவீந்திரன், டெக்னீசியன், அலுவலா்கள், தூய்மைக் காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். துணைத் தலைவா் தாஹசீனா இதாயத்துல்லா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com