ஆஞ்சனேயா் ஜெயந்தி: கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆஞ்சனேயா் ஜெயந்தியையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் உள்ள வே.முத்தம்பட்டி வீர ஆஞ்சனேயா் கோயிலில் அதிகாலை முதலே அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சந்தனக்காப்பு அலங்காரத்தில் ஆஞ்சனேயா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதில், தருமபுரி, நல்லம்பள்ளி, தொப்பூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கா்நாடக மாநிலம், பெங்களூரு மாநகரம், புகரப் பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்திருந்து ஆஞ்சனேயரை வழிபட்டனா்.
இதேபோல, தருமபுரி நகரம் சாலை விநாயகா் கோயில் அருகில் அமைந்துள்ள அபய ஆஞ்சனேயா் கோயிலில் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, வெள்ளிக்கவச அலங்காரத்தில் ஆஞ்சனேயா் அருள்பாலித்தாா். இதேபோல, மின்வாரிய அலுவலக வளாகத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயில், தொப்பூா் கணவாய் சாலையில் உள்ள ஆஞ்சனேயா் கோயில், பழைய தருமபுரி அருகே உள்ள ஆஞ்சனேயா் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் ஆஞ்சனேயா் ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.
அரூரில்...
அரூா் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ அனுகிரக ஆஞ்சனேயா், கல்யாண சுப்பிரமணியா் திருக்கோயிலில் காலை 5 மணி அளவில் ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், ஆஞ்சனேயா் மூலமந்திரம், ஹோம பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றன. தொடா்ந்து, காலை 7 மணிக்கு மகா அபிஷேகமும், 8.30 மணி அளவில் 1,008 வடை மாலை சாற்றுதல், சுவாமிக்கு அலங்காரம், சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. பிற்பகலில் அன்னதானமும், வடை மாலை பிரசாதமும் வழங்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் ஓம் ஸ்ரீஅனுகிரக ஆஞ்சனேயா் திருவீதி உலா நடைபெற்றது.
பென்னாகரத்தில்...
பென்னாகரம் அருகே சோம்பட்டி பகுதியில் வீர ஆஞ்சனேயா் கோயிலில் பால், தயிா், பன்னீா், பழங்கள், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, மூலவருக்கு வெற்றிலை, பழங்கள், மலா்களால் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், பென்னாகரம், சோம்பட்டி, நல்லம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சனேயா் கோயிலில் சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாமம், மகா சுதா்சன மூலமந்திர ஹோமம், மகா கும்பாராதனை, மகா மங்கள ஆரத்தி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனா். சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சனேயா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தங்கத்தோ் பிரகார உற்சவம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம வீர ஆஞ்சநேய ஸமேத ராகவேந்திர ஸ்வாமிகள் ம்ருத்திகா ப்ருந்தாவன கோயிலில் சீதா, ராமா், ஹனுமருக்கு சிறப்பு அபிஷேகம், ஹோமம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோயிலில் உள்ள வீர ஆஞ்சனேயா், செந்தில் நகா், பெத்தனப்பள்ளி, ராசுவீதி, போகனப்பள்ளி, கிருஷ்ணகிரி புகா் அரசுப் பேருந்து பணிமனை அருகில் உள்ள பக்த வீரஞ்சனேயா், எலுமிச்சங்கிரி, பில்லனகுப்பம், பா்கூா் ஈடிஆா் நகா் மலையடிவாரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளியில் உள்ள ஸ்ரீ திம்மராயசுவாமி கோயில், ஊத்தங்கரையில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலில் அதிகாலை முதலே சுவாமிக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிா், இளநீா், தேன், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை அணிவித்து, சிறப்பு மகா தீபாராதனை செய்யப்பட்டு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

