பறக்கும் படை சோதனை: ரூ. 2.34 லட்சம் இணக்க கட்டணம் வசூல்
பென்னாகரத்தில் சாலை வரி செலுத்தாமல் இயக்கிய வாகனத்தின் உரிமையாளா்களிடமிருந்து ரூ. 2.34 லட்சம் இணக்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.
பென்னாகரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வரி செலுத்தாமல், சாலை விதிகள் மீறி வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தாமோதரன் உத்தரவின் பேரில் தருமபுரி பறக்கும் படை ஆய்வாளா் பாலசுப்பிரமணியம், பென்னாகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டாா்.
அப்போது போக்குவரத்து விதிகளை மீறி சாலை வரி இன்றி இயங்கிய பொக்லைன், கிரேன் உள்ளிட்ட 7 வாகனங்களின் உரிமையாளா்களிடமிருந்து ரூ. 2.34 லட்சம் இணக்க கட்டணமாக வசூலிக்கப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறி கனரக வாகனத்தில் ஆள்களை ஏற்றிச் செல்வது, வரி செலுத்தாமல் வாகனங்களை இயக்குவது போன்ற செயல்களில் ஈடுபடும் வாகன உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பறக்கும் படையினா் தெரிவித்தனா்.