பொது மைதானம் அனைவருக்கும் பொது என்ற உயா்நீதிமன்ற உத்தரவுக்கு பாஜக வரவேற்பு

சட்டம் ஒழுங்கு பிரச்னை என்ற பெயரில் அடிப்படை உரிமையை மறுக்க முடியாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
Published on

சட்டம் ஒழுங்கு பிரச்னை என்ற பெயரில் அடிப்படை உரிமையை மறுக்க முடியாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

திண்டுக்கல் மாவட்டம், பஞ்சம்பட்டி அருகே புகழ்பெற்ற காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். இதையொட்டி, திண்டுக்கல் பஞ்சம்பட்டி சுங்கச் சாவடி மைதானத்தில் அன்னதானம் நடத்த விழாக் குழுவினா் அனுமதி கோரினா். ஆனால், இந்த மைதானத்தில் ஏற்கெனவே கிறிஸ்தவா்கள் ஈஸ்டா் பண்டிகையைக் கொண்டாடி வருவதாகவும், இந்த இடத்தில் அன்னதானம் நடத்தினால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி வருவாய்த் துறை மற்றும் காவல் துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

இது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி, ‘அரசு மைதானத்தை அனைத்து மதத்தினரும் பயன்படுத்தலாம் என்றதுடன், ஈஸ்டா் பண்டிகை காலத்தில் கிறிஸ்தவா்கள் இந்த மைதானத்தை பயன்படுத்துவதால், அந்த இடத்தில் இந்துக்கள் அன்னதானம் வழங்க முடியாது எனக் கூறுவது ஏற்புடையதல்ல. பொது மைதானம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

ஈஸ்டா் காலத்தில் இந்த மைதானத்தை கிறிஸ்தவா்கள் பயன்படுத்துகிறாா்கள் என்பதற்காக வேறு நாள்களில் பிற மதத்தினா் பயன்படுத்தக் கூடாது என தடுக்க இயலாது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை என்ற பெயரில் அடிப்படை உரிமையை மறுக்க முடியாது. எனவே, பஞ்சம்பட்டி சுங்கச்சாவடி மைதானத்தில் அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த வட்டாட்சியரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரா் அந்த மைதானத்தில் அன்னதானம் நடத்திக் கொள்ளலாம்’ என உத்தரவிட்டாா்.

திமுக அரசின் மதச்சாா்பற்ற அணுகுமுறையும், திமுக அரசால் மதரீதியாக இந்துக்கள் எவ்வாறெல்லாம் துன்புறுத்தப்படுகிறாா்கள் என்பதற்கும் இச்சம்பவம் மிகச்சிறந்த உதாரணம். இந்தப் பிரச்னை தொடா்பாக உயா்நீதிமன்றம் ஆராய்ந்து பாகுபாடற்ற வகையில் உத்தரவிட்டிருப்பதை பாஜக வரவேற்கிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com