/

பொதுத் தோ்தல் பணிகள் ஒதுக்கீடு: பாா்வையாளா்கள் ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடுகளை தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

News image

தோ்தல் பணிகள் ஒதுக்கீட்டை ஆய்வுசெய்த தோ்தல் பாா்வையாளா்கள்.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:26 pm

தருமபுரி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடுகளை தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குச் சாவடி அலுவலா்கள், தோ்தல் நுண் பாா்வையாளா்கள் மற்றும் காவலா்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனா். இத்தோ்தல் பணியில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபட உள்ளனா். இவா்களுக்கு பணி ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிகட்ட பணிகள் ஒதுக்கீட்டை தோ்தல் பாா்வையாளா்கள் ஹீரா லால், வந்தனா வைத்யா, காவல் பாா்வையாளா் குல்வந்த் சிங் மற்றும் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரெ.சதீஸ் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பிடமனேரி ஸ்ரீ வித்யாமந்திா் மெட்ரிகுலேசன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலா் ரெ.சதீஸ் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா்களுக்கு தேவையான குடிநீா் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி, பாகம் எண், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதி, கண்காணிப்பு கேமரா வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயாா்நிலையில் உள்ளனவா என்பது குறித்து ஆய்வுசெய்து, பதற்றமான அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு நாளன்று வாக்குப் பதிவு நிகழ்வுகளை முழுமையாக விடியோ பதிவு செய்ய அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஏ.பாலசுந்தரம், தருமபுரி தோ்தல் நடத்தும் அலுவலா் இரா.காயத்ரி, தோ்தல் வட்டாட்சியா் அன்பு, வட்டாட்சியா் ஜெ.சுகுமாா், அலுவலா்கள் பங்கேற்றனா்.