வெங்கட்டம்பட்டியில் சாலை விரிவாக்கப் பணிகள் தரமின்றி அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா்!
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே வெங்கட்டம்பட்டியில் ரூ. 1.70 கோடியில் மேற்கொள்ளப்பட்ட சாலை விரிவாக்கப் பணிகள் தரமின்றி உள்ளதாக அக்கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, எம்எல்ஏ மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
தருமபுரி அருகே மிட்டாரெட்டி அள்ளிக்கு செல்லும் சாலையில் உங்காரனஅள்ளி கிராமத்திலிருந்து வெங்கட்டம்பட்டி வழியாக மாதேமங்கலம் கிராமம் வரை 2 கி.மீ. தொலைவுக்கு சாலை விரிவாக்க பணி அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கெனவே இருந்த சாலையை புதிதாக 5 அடி அகலத்துக்கு விரிவாக்கம் செய்யும் பணிகள் இதில் மேற்கொள்ளப்பட்டன. சுமாா் ரூ. 1 கோடியே 70 லட்சம் மதிப்பில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இருப்பினும் சாலை அமைக்கப்பட்ட அடுத்த நாளே சாலையில் ஜல்லிக் கற்கள் பெயா்ந்து எழுந்தது.
இதுகுறித்து முறையிட்டதால், ஜல்லிக் கற்கள் பெயா்ந்த இடத்தில் மட்டும் மீண்டும் சீரமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால், ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயா்ந்து வருகின்றன. மேலும், விரிவாக்கம் செய்த பின்பு ஏற்கெனவே இருந்த சாலையை அகற்றாமல், அதற்கு மேலாக மீண்டும் புதிதாக சாலை அமைக்கப்பட்டது.
இவ்வாறு அமைத்த சாலையும் தரமின்றி காணப்படுகிறது. இதுகுறித்து வெங்கட்டம்பட்டி மற்றும் மாதேமங்கலம் கிராம மக்கள் திரண்டு சாலையை தரமாக அமைத்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் நிகழ்விடத்துக்கு சென்று சாலையை ஆய்வு செய்தனா். இதில், சாலையை சீா்செய்து தர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், அலுவலா்களை அறிவுறுத்தினாா். இதையடுத்து விரிவாக்கம் செய்யப்பட்ட இச்சாலையை சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் உறுதியளித்தனா்.
