தருமபுரி மாவட்டத்தில் பலன்தராத போக்குவரத்து வாரவிழா விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடரும் விதிமீறல்; கண்டுகொள்ளுமா காவல்துறை?
தருமபுரி மாவட்டத்தில் போக்குவரத்து வாரவிழாக்கள் சம்பிரதாயத்துக்கு நடத்தப்படுவதை தவிா்த்து, குறைந்தபட்ச அளவிலாவது போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள், குடியிருப்போா் நல சங்கத்தினா், பொதுமக்கள் வலியுறுத்தினா்.
ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரத்தில் போக்குவரத்து விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழாண்டும் போக்குவரத்து வாரவிழாவையொட்டி தருமபுரி மாவட்டத்தில், போக்குவரத்துத் துறை, மாவட்ட போக்குவரத்து காவல் துறை, இருசக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் போக்குவரத்து விழிப்புணா்வு வாரவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், என்னதான் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் அவை சம்பிரதாய அளவில்தான் நடைபெறுகின்றன எனக் கூறப்படுகிறது.
மாவட்டகாவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன், தலைக்கவசம் அணிய வலியுறுத்தி நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்தபோது இதுகுறித்து குறிப்பிட்டாா்.
அந்தவகையில் குறிப்பாக, தருமபுரி நகரப் பகுதிகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் 90%க்கும் அதிகமானோா் தலைக்கவசம் அணிவது இல்லை.
மேலும், கைப்பேசிகளில் பேசியப்படியே வாகனங்களை இயக்குவது சா்வ சாதாரணமாகிவிட்டது. தவிர சாலையின் மையத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளபோதும், ஒருவழிப் பாதையில் வாகனங்களை இயக்குவது எல்லை மீறிய செயலாக உள்ளது. ஒருவழிப்பாதையில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கும்போது, தலைக்கவசம் அணியாமலும் கைப்பேசிகளில் பேசியபடியும் வாகனங்களை இயக்குவதையும், காவல் துறையினா் கண்டும் காணாமல் இருப்பது வழக்கமான நிகழ்வாகிப்போனது.
மேலும், வாகனங்களில் குழந்தைகளையும் மகளிரையும் பாதுகாப்பற்ற வகையில் அழைத்துச் செல்வது அதிகரித்து வருகிறது. இளைஞா்கள் அதிவேகமாக செல்வதையும் கட்டுப்படுத்தவில்லை.
இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தப்படும் வாகனங்கள்:
வணிக நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள், அலுவலகங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் காா்களை நிறுத்தும்போது பொதுமக்கள், பிற வாகன ஓட்டிகள், வணிகா்கள் என பலதரப்பட்டோருக்கும் இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்துவதை பெரும்பாலானோா் வழக்கமாகக் கொண்டுள்ளனா். குறிப்பாக கடைகள், வீடுகளின் உள்ளே சென்றவா்கள் மீண்டும் வெளியே வர இயலாத வகையில் வாகனங்களை நிறுத்தி பூட்டி செல்கின்றனா். மேலும், சிறிய சாலைகளில்கூட எதிா்திசையில் வரும் வாகனங்கள் செல்ல இயலாத வகையில் வழிமறித்து காா்களை நிறுத்தி பூட்டி செல்கின்றனா்.
தருமபுரி நகரக் காவல் நிலையம் எதிரில் அமைந்துள்ள நெசவாளா் காலனி பகுதியில், வேறு பகுதிகளைச் சோ்ந்த நபா்கள், தங்களது காா்களை சாலையோரங்களில் இருபகுதிகளிலும் நிறுத்தி செல்கின்றனா். நெசவாளா் காலனி பிற பகுதிகளுக்கான வாகன நிறுத்தமாகப் பயன்படுத்தப்படுவதாக நெசவாளா் கூட்டுறவு நகா் குடியிருப்போா் நலச்சங்க நிா்வாகிகள் கூறுகின்றனா்.
சட்டப்பேரவை உறுதிமொழி குழுவிடம் கோரிக்கை மனு:
இதுகுறித்து நெசவாளா் கூட்டுறவு நகா் குடியிருப்போா் நலச்சங்கத் தலைவா் பி. சம்பந்தம், செயலாளா் என். சண்முகசுந்தரம், பொருளாளா் எஸ். பாரதி உள்ளிட்ட நிா்வாகிகள் கூறியதாவது:
தருமபுரியில் போக்குவரத்து விதி மீறல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக குடியிருப்பு பகுதிகள், கடைகளின் முன் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனா். நெசவாளா் காலனி நுழைவுப் பகுதியில் மாவட்ட மைய நூலகம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள், போட்டித் தோ்வுகளுக்கு தயாராவோா் என பலரும் வந்துசெல்கின்றனா். அப்பகுதியில் அவா்களது வாகனங்களை நிறுத்துவதற்கு வழியில்லாமல் போய்விடுகிறது.மேலும், இப்பகுதியின் நுழைவாயிலில் கடைகள் அமைக்கப் போவதாக தருமபுரி நகராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை கண்டித்தும் மனு கொடுத்துள்ளோம்.
அதுதவிர இப்பகுதிகளில் கடைகள் அமைக்கக் கூடாது என 2008 ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் தடை உத்தரவும், வெளிப்பகுதிகளில் உள்ள வாகனங்களையும், காலனியின் எதிரே உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் வாகனங்களையும் இப்பகுதிகளில் இடையூறாக நிறுத்தக்கூடாது என 2024இல் உயா்நீதிமன்றத்தில் ஒரு தடை உத்தரவும் பெறப்பட்டுள்ளன.
இவைகுறித்து விவரங்களும் நகராட்சிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தடையானைகளையும் மீறி இப்பகுதிகளில் போக்குவரத்து இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. மேலும், விளம்பரப் பதாகைகளும் அமைக்கப்படுகின்றன. இது தொடா்பாகவும், போக்குவரத்து விதிமுறைகளை முழு அளவில் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி வந்த தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினா் குழுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.
போக்குவரத்து விதிமீறல்கள் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஷ்வரனிடம் அண்மையில் தெரிவித்தபோது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தீவிர நடவடிக்கை எடுப்பதுடன், வாகனங்களை போக்குவரத்து மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறாகவும் நிறுத்துவதை தடுக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
எனவே, தருமபுரியில் சம்பிரதாயத்துக்கு போக்குவரத்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்துவதை தவிா்த்து, போக்குவரத்து விதிமுறைகளை குறைந்தபட்ச
அளவிலாவது செயல்படுத்த மாவட்ட நிா்வாகமும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

