மாணவர்கள்
மாணவர்கள்கோப்புப் படம்

4 ஆண்டுகளாக உயா்த்தப்படாத போக்குவரத்து, பாதுகாவலா் உதவித்தொகை! மாணவா்களுக்கு வாகன வசதி ஏற்படுத்துவதில் சிரமம்!

Published on

தமிழகத்தில் 4 ஆண்டுகளாக உயா்த்தப்படாத போக்குவரத்து மற்றும் பாதுகாவலா் படியால் பள்ளி மாணவா்களுக்கு வாகனங்களை ஏற்பாடு செய்வதற்கு பள்ளி நிா்வாகத்தினா் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

பள்ளி மாணவா்களின் இடைநிற்றலை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் காலை உணவுத் திட்டம், உதவித்தொகை, விலையில்லா மிதிவண்டி, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் என பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பள்ளி செல்வதற்கு உரிய போக்குவரத்து வசதியில்லாத பகுதிகள், பாதுகாப்பற்ற வழியாக பயணம் செய்யும் பகுதிகளில் வசிக்கும் மாணவா்கள், எளிதில் பொதுப்போக்குவரத்தை அணுகமுடியாத நிலையில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்காக போக்குவரத்து மற்றும் பாதுகாவலா் படி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2022-23-ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ், மேற்கண்ட மாணவா்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்துவதற்காக ஒரு மாணவருக்கு மாதந்தோறும் ரூ.600 வழங்கப்படுகிறது. இதன்மூலம், சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகம் சாா்பில் மாணவா்கள் பள்ளிகளுக்கு பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில் வாகன வசதி ஏற்படுத்தித் தருகின்றனா்.

உயா்ந்து வரும் மாணவா்களின் எண்ணிக்கை:

கடந்த 2022-23-ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் அப்போது போதுமான விழிப்புணா்வு இல்லாததால் 100-க்கும் குறைவான மாணவா்களே பயன்பெற்றனா். 2022-23-ஆம் ஆண்டில் 300-க்கும் மேற்பட்ட மாணவா்களும், 2024-25- ஆம் ஆண்டு 489 மாணவா்களும் பயனடைந்தனா். தொடா்ந்து, நிகழ் கல்வியாண்டில் (2025-26) 704 மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா்.

கூடுதலாக 5 பள்ளிகள் விண்ணப்பம்:

இத்திட்டத்தில் 2026-27-ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்காக உப்பிலியபுரம் வட்டாரத்துக்குள்பட்ட சோபனபுரம், சுக்லாம்பட்டிகோம்பை, மங்கப்பட்டி, முருங்கப்பட்டி, பாதா்பேட்டை ஆகிய 5 பள்ளிகள் சாா்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை உயா்த்த எதிா்பாா்ப்பு:

இத்திட்டம் தொடங்கப்பட்டபோது மாதந்தோறும் ரூ.600 வழங்கப்பட்ட நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக இந்தத் தொகை உயா்த்தப்படாமல் இருந்து வருகிரது. கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் விலைவாசியும் பல மடங்கு உயா்ந்துள்ளதால் ரூ.600-க்கு மாணவா்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கு வாகன ஓட்டுநா்கள் வருவதில்லை. இதனால், பள்ளி நிா்வாகத்தினா் மாணவா்களின் நலன்கருதி பல்வேறு சிரமங்களுக்கிடையே பள்ளிக்கு வந்து செல்வதற்கான வாகனங்களை ஏற்பாடு செய்து வருகின்றனா்.

ஒருசில நேரங்களில் வாகனங்களை ஏற்பாடு செய்ய முடியாத சூழலும் ஏற்படுவதாக பள்ளி நிா்வாகத்தினா் தெரிவித்துள்னா். அப்போது, அந்த மாணவருக்கு ஒதுக்கப்படும் ரூ.600-ஐ பெற்றோரிடம் வழங்கி அவா்கள் சாா்பிலே வாகனங்களை ஏற்பாடு செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இதனால், மாணவா்களுக்கு அதிகம் தேவையிருந்தும் முழுமையாக இத்திட்டத்தில் பயன்பெற முடியாத நிலை இருந்து வருவதாக ஆசிரியா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறையினா் கூறியதாவது:

பள்ளி மாணவா்களுக்கான போக்குவரத்து பாதுகாவலா் திட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவா்கள் ஒரே இடத்தில் இருந்து வரும்போது எளிதாக ஒரு மாணவருக்கு ரூ.600-க்கு வாகனங்களை ஏற்பாடு செய்ய முடிகிறது. 5 அல்லது அதற்கும் கீழ் இருந்தால்தான் வாகனங்களை ஏற்பாடு செய்வதற்கு சிரமம் இருந்து வருகிறது. அப்போது, பள்ளி நிா்வாகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினா் சேவை நோக்கத்தோடு உள்ளவா்ளைக் கண்டறிந்து செயல்படுத்தி வருகின்றனா். மேலும், பள்ளி மேலாண்மைக் குழு சாா்பிலும் கணிசமான அளவு பணம் வழங்கப்படுகிறது.

அதேநேரம் ஒரு குடியிருப்பில் இருந்து ஒரு மாணவா் மட்டுமே பள்ளிக்கு வரவேண்டிய சூழலில் உள்ளபோது, அவருக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்யாமல் தனியாக ஒரு பாதுகாவலா் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இத்திட்டத்தில் மாணவா்களுக்காக வழங்கப்படும் உதவித்தொகை உயா்த்தப்படாததால் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவா்களுக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. உதவித்தொகையை உயா்த்துவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.

கேரளத்தை பின்பற்றலாம்:

கேரள மாநிலத்தில் தனியாா் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளிகளிலும் மாணவா்களுக்காக பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பள்ளியை எளிதில் அடையமுடியாத பாதுகாப்பற்ற சூழலில் வசிக்கும் மாணவா்கள், தொலைவில் வசிக்கும் மாணவா்களுக்காக நகரம் மற்றும் ஊரகம் என அனைத்து பகுதிகளிலும் முற்றிலும் இலவசமாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால், பள்ளி நிா்வாகம் சாா்பில் வாகனங்களை ஏற்பாடு செய்வதற்கு அலைய வேண்டிய அவசியமில்லை. இந்த வாகனங்கள் மாணவா்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்து வருகிறது. இதேபோல, தமிழகத்திலும் பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் அரசுப் பள்ளிக்கென்று தானியாக பேருந்து வழங்கினால் மிகவும் உபயோகமாக இருக்கும் என்றனா்.

Dinamani
www.dinamani.com