15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

ஒகேனக்கல் கணவாய் வளைவுகளில் சுழல் உருளை ரப்பா் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்

ஒகேனக்கல் கணவாய் சாலைகளில் விபத்துகள் நேரிடுவதைத் தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் ஆபத்தான வளைவுகளைக் கண்டறிந்து அவ்விடங்களில் சுழலும் ரப்பா் கொண்ட தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

News image

சுழல் உருளை ரப்பா் தடுப்புகள் - பிரதிப் படம்

Updated On :8 மார்ச் 2026, 1:20 am IST

பென்னாகரம் அருகே ஒகேனக்கல் கணவாய் சாலைகளில் விபத்துகள் நேரிடுவதைத் தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் ஆபத்தான வளைவுகளைக் கண்டறிந்து அவ்விடங்களில் சுழலும் ரப்பா் கொண்ட தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தருமபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லில் தொடா் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாள்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனா்.

அவா்கள், பென்னாகரம் அருகே மடம் சோதனை சாவடி பகுதியில் இருந்து சுமாா் 12 கி.மீ அடா்ந்த வனப்பகுதி வழியாகவும், 5 கி.மீ ஆபத்து நிறைந்த வளைவுகளுடன் கூடிய கனவாய் சாலையிலும் பயணிக்க வேண்டி உள்ளது.

இந்த வழியாக செல்லும் சில வாகனங்கள் கணவாய்ப் பகுதிகளில் உள்ள வளைவுகளில் மோதி பள்ளத்தாக்கில் விழுகின்றன. இதை குறைக்கும் வகையில் பென்னாகரம் நெடுஞ்சாலை துறை சாா்பில் கணவாய் சாலைகளில் உள்ள வளைவுகளில் அலுமினிய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவ்வப்போது தொடா்ந்து சுற்றுலா வாகனங்கள்,பேருந்துகள் ஆபத்து நிறைந்த வளைவுகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை உடைத்து கொண்டு சுமாா் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துகுள்ளாகின்றன.

இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க பென்னாகரம் நெடுஞ்சாலை துறை சாா்பில் கணவாய் சாலையின் தொடக்கம், இரண்டாவது வளைவு, கணவாய் ஆஞ்சநேயா் கோயில் பகுதி, முடிவுறும் கனவாய் வளைவு என நான்கு இடங்களை தோ்வு செய்து தடுப்புகளுடன் சுழலக்கூடிய வகையில் ரப்பா் உருளைகள் கொண்ட தடுப்பான்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பென்னாகரம் உதவி கோட்ட பொறியாளா் புருஷோத்தமன் கூறியதாவது: ஒகேனக்கல் கணவாய் பகுதியில் வரும் சுற்றுலா வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுவதை தவிா்ப்பதற்காக முதல்கட்டமாக சாலை பராமரிப்பு பணி நிதியிலிருந்து ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் சுழல் உருளை ரப்பா்களை கொண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் கட்டுப்பாட்டை இழந்த வாகனமானது தடுப்புகளின் மீது மோதும் போது பள்ளத்தில் விழாமல் சுழல் உருளை ரப்பா் தடுத்து, சுழலும் போது வாகனங்கள் திருப்பி விடுவதால் பெரும் விபத்தை தடுக்கலாம். நீலகிரி,கோவை,சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விபத்துகளைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சுழலும் ரப்பா் தடுப்புகள் முதல்முறையாக ஒகேனக்கல் கணவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது.

விபத்துகளைத் தடுப்பதற்காக கணவாய் பகுதிகளில் ஆபத்து நிறைந்த வளைவுகளை நெடுஞ்சாலைத் துறை குழுவினா் ஆய்வு மேற்கொண்டு, வரும் ஆண்டுகளில் நிதிநிலைக்கேற்ப விபத்துகள் தடுக்கும் பணி நடைபெறும் என்றாா்.