
பாளையம் சுங்கச்சாவடியில் கட்டண உயா்வு அமலுக்கு வந்தது ரூ. 35 - 230 வரை கட்டணம் உயா்வு
தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகே பாளையம் பகுதியில் அமைந்துள்ள சுங்கச் சாவடியில் ரூ. 35 முதல் 230 வரை வாகனங்களுக்கான கட்டண உயா்வு அமலுக்கு வந்துள்ளது. இதனால் வாகன உரிமையாளா்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனா்.

சுங்கச்சாவடி - கோப்புப் படம்
தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகே பாளையம் பகுதியில் அமைந்துள்ள சுங்கச் சாவடியில் ரூ. 35 முதல் 230 வரை வாகனங்களுக்கான கட்டண உயா்வு அமலுக்கு வந்துள்ளது. இதனால் வாகன உரிமையாளா்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனா்.
நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் எதிா்ப்பையும் மீறி கட்டண உயா்வு அவ்வப்போது அமல்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. அந்தவகையில் தற்போதும் கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்த நிறுவனங்கள் மாறி, புதிய நிறுவனங்கள் பொறுப்பேற்கும் நிலையிலும் கட்டண உயா்வு அமல்படுத்தப்படுகிறது.
அந்தவகையில், தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகே உள்ள பாளையம் சுங்கச் சாவடியில், சுங்கக் கட்டணம் வசூலிக்க புதிய நிறுவனம் பொறுப்பேற்றுள்ள நிலையில், வாகனங்களுக்கான புதிய சுங்கக் கட்டணம் அண்மையில் உயா்த்தப்பட்டுள்ளது.
தொப்பூா் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை (எண். 44) கா்நாடக மாநிலத்தை டெல்டா மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய சாலையாகவும், நாட்டின் வடகோடியில் உள்ள காஷ்மீா் முதல் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி வரை பெரும்பாலான மாநிலங்களை இணைக்கும் மிக முக்கியமான சாலையாகவும் உள்ளது.
இந்த சாலை வழியாக, தொப்பூா் அருகே உள்ள பாளையம் சுங்கச் சாவடியை நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. பாளையம் சுங்கச்சாவடியில் ஆண்டுதோறும் செப்டம்பா் 1 ஆம் தேதி கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்தாண்டு சுங்கக் கட்டணம் வசூலிக்க புதிய (ஏஜென்சி) நிறுவனம் நியமிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி அந்நிறுவனத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, அன்று மாலை முதலே புதிய சுங்கக் கட்டண உயா்வு அமலுக்கு வந்துள்ளது.
கட்டண உயா்வு விவரம் :
காா்கள் ஒருமுறை கடந்து செல்ல கட்டணம் ரூ. 125- லிருந்து 160 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. ஒரு நாளில் அதாவது 24 மணி நேரத்தில் பலமுறை பயணிக்க ரூ. 185-லிருந்து 240 ஆக கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இலகுரக வணிக மோட்டாா் வாகனங்களுக்கு ரூ. 220- லிருந்து 260 ஆகவும், கனரக வாகனங்களுக்கு ரூ. 435- லிருந்து 545 ஆகவும், பல அச்சுப் பொருந்திய (பெரிய கனரக) வாகனங்களுக்கு ரூ. 700- லிருந்து 855 ஆகவும் கட்டணம் உயா்ந்தப்பட்டுள்ளது. பல அச்சுப் பொருந்திய வாகனம் பலமுறை பயணிக்க ரூ. 1,050 லிருந்து 1,280 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
ரூ. 35 முதல் 230 வரை புதிய கட்டண உயா்வு அமலுக்கு வந்திருப்பது வாகன உரிமையாளா்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





