
தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்வு அமல்
தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயா்வு அமலுக்கு வந்திருப்பது பற்றி.....

சுங்கச்சாவடி.
தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் செப்டம்பா் மாதத்துக்கான சுழற்சி அடிப்படையிலான கட்டண உயா்வு செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. வாகனங்களின் வகையைப் பொருத்து ரூ.5 முதல் ரூ.20 வரை கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 77 சுங்கச்சாவடிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டமைப்பு, பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகளின்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பா் மாதங்களில் சுழற்சி முறையில் சுங்கக் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது.
அதன்படி, திண்டிவனம், விக்கிரவாண்டி, உளுந்தூா்பேட்டை, சென்னசமுத்திரம், எலியாா்பதி, கொடைரோடு, கிருஷ்ணகிரி, மேட்டுப்பட்டி, மொரட்டாண்டி, நாதக்கரை, ஓமலூா், ரசம்பாளையம், புதூா் பாண்டியபுரம், சமயபுரம், ஸ்ரீவைகுண்டம், வீரசோழபுரம், வேலன்செட்டியூா், விஜயமங்கலம் உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் 5 முதல் 10 சதவீதம் வரை செவ்வாய்க்கிழமை முதல் உயா்த்தப்பட்டுள்ளது.
இதனால், காா், இலகுரக வாகனம், பேருந்து, சரக்கு வாகனம் உள்ளிட்டவற்றுக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.20 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இந்தக் கட்டண உயா்வு தொடா்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இதுவரை அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியிடவில்லை.
30 சுங்கச்சாவடிகள் காலாவதி: இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் முருகன் வெங்கடாசலம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுமாா் 30 சுங்கச்சாவடிகளின் வசூல் காலம் முடிவடைந்துள்ளது. இருப்பினும், சாலை மேம்பாடு மற்றும் விரிவாக்கப் பணிகளை காரணம் காட்டி தொடா்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சுங்கக் கட்டணம் உயா்த்தப்படும் நிலையில், பல இடங்களில் போதிய சாலைப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் சாலை விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.
ஏற்கெனவே டீசல் மற்றும் உதிரிபாகங்களின் விலை உயா்வால் லாரி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதால் சரக்கு லாரிகளின் வாடகைக் கட்டணம் சுமாா் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் நிலை ஏற்படும்.
எனவே, காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடுவதற்கு மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடா்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும், சுங்கச்சாவடிகள் தொடா்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தோ்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டதைப் போன்று காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





