தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

ஒசூருக்குள் புகுந்த காட்டு யானைகள்

: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் நகருக்குள் சனிக்கிழமை புகுந்த 4 காட்டு யானைகள் பேருந்து நிலையம், தெருக்களில் வலம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :12 மே 2013, 5:36 am IST

: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் நகருக்குள் சனிக்கிழமை புகுந்த 4 காட்டு யானைகள் பேருந்து நிலையம், தெருக்களில் வலம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் இருந்து அஞ்செட்டி வனப் பகுதிக்குள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் புகுந்தன.

இந்த யானைகள் பல கும்பலாக பிரிந்து தேன்கனிக்கோட்டை, தளி, ஜவளகிரி, ராயக்கோட்டை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, சானமாவு, சூளகிரி என பல இடங்களில் விவசாயப் பயிர்களை அழித்து வருகின்றன.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை 6 மணிக்கு பேரண்டப்பள்ளி காப்புக் காட்டில் இருந்து ஒசூர் பேருந்து நிலையம் வழியாக ஒசூர் கால்நடை மருத்துவமனைக்குள் 20 வயது மதிக்கத்தக்க 4 காட்டு யானைகள் புகுந்தன.

இந்த யானைகள் மருத்துமனை சுற்றுச் சுவற்றை இடித்துத் தள்ளின. பின்னர், அங்கிருந்து ஒசூர் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைச் சாலையில் சென்றன.

அப்போது, ஒசூர் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு மூக்கண்டப்பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற முனிராஜை, யானைகள் வழிமறித்து அவரைத் தூக்கி வீசியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவர் கொண்டு சென்ற காய்கறிகளை சாப்பிட்டு விட்டுச் சென்றன.

பின்னர், ஒசூர் திமுக நகர அலுவலகம் வழியாக புதிய ஏஎஸ்டிசி அட்கோ பகுதிக்குள் புகுந்தன. அந்த வழியாகச் சென்ற பெண்கள் உள்பட 4 பேரை யானைகள் தாக்கியதில் அவர்கள் காயமடைந்தனர்.

அந்த யானைகள் 100 அடிச் சாலை வழியாக முனீஸ்வர் நகருக்குச் சென்றது. அங்கு ஒவ்வொரு தெருவாகச் சென்று மரங்களை முறித்து நாசம் செய்தன. இதைக் கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

தெருக்களில் யானைகள் உலா வந்ததை பாதுகாப்புடன் ஆங்காங்கே நின்று பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.

நகர் பகுதியிலிருந்து சென்ற யானைகள் மத்திகிரி கால்நடைப் பண்ணை அருகே முகாமிட்டிருப்பதால், அவை மீண்டும் நகருக்குள் வரும் வாய்ப்புள்ளது. எனவே, அந்த யானைகளை கர்நாடக மாநிலம், பன்னர்கட்டா காப்புக் காட்டுக்கு விரட்டும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.