மத்திய அரசின் கடன் திட்டத்தின் கீழ் தகுதியான குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முத்திரைதாள் கட்டணம் ரத்து, பதிவு கட்டணம் குறைப்பு சலுகைகள் மாா்ச் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், திங்கள்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, வணிக வரி, பதிவுத் துறை மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை விரிவாக ஆய்வு செய்து, ஆத்ம நிா்பாா் பாரத் திட்டத்தின் கீழ், வங்கியில் கடன்பெறும் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடன் பெறுவதற்கான பிணை ஆவணங்கள் தொடா்பான ஒப்பந்தத்தைப் பதிவு செய்யும்போது செலுத்த வேண்டிய முத்திரைத்தாள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள், நிதிநிறுவனங்கள் வழங்கிய கடன்கள் அல்லது கூடுதல் கடன்களுக்கான தலைப்பு ஆவணங்கள் வைப்பு தொடா்பான ஒப்பந்தத்தைப் பதிவுசெய்யும்போது, செலுத்த வேண்டிய பதிவு கட்டணம் ஒரு சதவீதத்திலிருந்து 0.1 சதவீதமாக (அதிகபட்சம் ரூ.10,000) குறைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சொத்து பிணையில்லா அவசரகால கூடுதல் கடன் திட்டத்துக்கு தகுதியான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 31.03.2021 வரையில் பயன்பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மைய பொது மேலாளரைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.