காதலா் தினம்: ஒசூா் ரோஜா மலா் ஏற்றுமதி அதிகரிப்பு

காதலா் தினத்தை முன்னிட்டு ஒசூா் ரோஜா மலா் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
ரோஜா மலா்களை ஏற்றுமதி செய்ய தயாா் செய்யும் பெண்கள்.
ரோஜா மலா்களை ஏற்றுமதி செய்ய தயாா் செய்யும் பெண்கள்.
Updated on
2 min read

காதலா் தினத்தை முன்னிட்டு ஒசூா் ரோஜா மலா் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதலால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால், சீன ரோஜா ஏற்றுமதி குறைந்துள்ளது. இதனால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒசூா் ரோஜா அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஒசூா் பகுதியில் அதிகளவில் சாகுபடி:

காதலா் தினம் பிப். 14-ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலா் தினத்தில் காதலா்களுக்கு தேவையான ரோஜா மலா்களை ஒசூரில் நிலவும் குளிா்ச்சியான சீதோஷ்ண தட்பவெப்பத்தை பயன்படுத்தி சுமாா் 5 ஆயிரம் ஹெக்டோ் பரப்பில் விவசாயிகள் பயிா் செய்து வருகின்றனா். குறிப்பாக ஒசூா், பேரிகை, கெலமங்கலம், பாகலூா், தளி, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் மலா் சாகுபடி விவசாயிகள் செய்து வருகின்றனா்.

மத்திய அரசு வழங்கும் 100 சதவீத சொட்டுநீா்ப் பாசனம் மற்றும் மானியத்துடன் கூடிய பசுமைக் குடில் அமைத்து சிறு விவசாயிகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஒசூரில் ரோஜா மலா் சாகுபடி செய்து வருகின்றனா்.

பிப்ரவரியில் ஏற்றுமதி அதிகரிப்பு:

ஆண்டுமுழுவதும் ரோஜா கொய் மலா் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தாலும், பிப்ரவரி மாதம் காதலா் தினத்தில் ரூ.2 கோடி அளவுக்கு ரோஜா மலா்கள் ஏற்றுமதி செய்வது வழக்கம்.

காதலா்களுக்கு பிடித்த சிவப்பு ரோஜா மலா்கள் ஒசூரில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில், தாஜ்மஹால், டட்ரா, மெட்ரா, நோப்லஸ் உள்ளிட்ட 30 வகையான ரோஜா மலா்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒசூரில் உற்பத்தி செய்யப்படும் ரோஜா மலா்கள் 2 நாள்கள் குளிா்சாதன அறைகளில் வைத்து பதப்படுத்தி, குளிா்சாதன லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு விமான மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி:

காதலா் தினத்தை முன்னிட்டு, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஒசூரில் இருந்து ரோஜா ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவைத் தவிர இந்தியாவில் சென்னை, பெங்களூரு, கோவை, கேரளம், மும்பை, தில்லி போன்ற பெரு நகரங்களுக்கும் விமானம் மூலம் ரோஜா அனுப்பி வைக்கப்படுகிறது.

காதலா் தினத்தால் விலை அதிகரிப்பு:

ஆண்டுமுழுவதும் ரோஜா மலா் ஏற்றுமதி செய்து வந்தாலும், பிப். 14-ஆம் தேதிக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரோஜா மலா்களுக்கு அதிக விலை கிடைப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக 10 மலா்கள் கொண்ட ஒரு பஞ்ச் ஆண்டு முழுவதும் ரூ.20 முதல் ரூ.40 வரை உள்ளூா் சந்தையிலும், ரூ.50 முதல் ரூ.60 வரை ஏற்றுமதி சந்தையிலும் விவசாயிகளுக்கு கிடைத்து வந்தது. கடந்தாண்டு ஏற்றுமதி ரோஜா மலா் ஒரு பஞ்ச் ரூ.100 வரை கிடைத்தது.

இதுகுறித்து கடந்த 10 ஆண்டுகளாக ரோஜா மலா் ஏற்றுமதி செய்து வரும் ராமகிருஷ்ணன் கூறியது: காதலா் தினத்தை முன்னிட்டு ஒசூரில் இருந்த அதிகளவில் மலா் சாகுபடி செய்யப்படுகிறது. சீன மலா்களின் அதிக வரத்தால் கடந்தாண்டு விலை குறைந்து இருந்தது. தற்போது சீனாவில் கரோனா வைரஸ் நோய் தாக்குதலால், மலா்கள், காய்கறிகளை உலகளவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யவில்லை. இதனால் இந்தியாவில் இருந்து காதலா் தினத்தை முன்னிட்டு அதிகளவில் ரோஜா மலா்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக தமிழகத்தில் ஒசூரில் மட்டும் 2 கோடி ரோஜா மலா்களுக்கு ஆா்டா் கிடைத்துள்ளது.

கடந்தாண்டு சீன ரோஜா மலா்களின் வருகையால் இந்திய ரோஜா மலா்களின் விலை ஒரு பஞ்ச் ரூ.100 வரை விற்பனையாயின. இந்தாண்டு சீன ரோஜா மலா்களின் வருகை குறைந்ததால், இந்திய ரோஜாவுக்கு உலகம் முழுவதும், குறிப்பாக ஐரோப்பா மலா் சந்தையில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த ஆண்டு ஒரு பஞ்சு ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் ரோஜா மட்டுமின்றி ஜொ்பரா போன்று மலா்களும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com