கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை வெளயிடப்பட்டது. இதில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 84.04 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்துள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வங்கியாளா்களுக்கான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நபாா்டு வங்கி சாா்பில் 2024-25-ஆம் ஆண்டிற்கான ரூ. 18,273.55 கோடி மதிப்பில் வளா்ச்சி சாா்ந்த கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் கே.எம்.சரயு வெளியிட்டுப் பேசியதாவது:
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளா்ச்சி வங்கி (நபாா்டு வங்கி) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற வளம் சாா்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ. 18,273.55 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது. இது 2023-24-ஆம் ஆண்டைவிட 84.04 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2024-25-ஆம் ஆண்டுக்கு, பயிா்க் கடன் ரூ. 81,47.36 கோடி, விவசாய முதலீட்டுக் கடன் ரூ. 2,471.52 கோடி, விவசாய கட்டமைப்பு கடன் ரூ. 464.03 கோடி, விவசாய இதர கடன்கள் ரூ. 230.07 கோடி என விவசாயத்திற்கான மொத்த கடன் மதிப்பீடு ரூ. 11312.99 கோடியாகும். இதே போன்று, சிறு, குறு நடுத்தர தொழில் கடன் ரூ. 5,726.25 கோடி, ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான கடன் ரூ. 168.11 கோடி, அடிப்படைக் கட்டுமான வசதி ரூ. 57 கோடி, சுய உதவிக்குழு மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கான கடன் அளவு ரூ. 995.55 கோடி என மொத்தம் ரூ. 18,273.55 கோடி அளவுக்கு மதிப்பீடு செய்து கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
இது போன்ற கடன் வசதிகள், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளைப் பெருக்கி விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்ற உதவும். வேளாண்மையில் இயந்திரமயமாக்கல், சொட்டுநீா் மற்றும் தெளிப்பு நீா் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளா்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாகச் செய்தல், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க உதவிடும். இது போன்ற முதலீடுகளுக்கு வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.
இந்நிகழ்வில், ரிசா்வ் வங்கியின் முன்னோடி மாவட்ட அலுவலா் கிருஷ்ணகுமாா், நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் ரமேஷ், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் ராஜேந்திரன், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளா் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சீனிவாசன், தாட்கோ மேலாளா் வேல்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.