வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

திருவண்ணாமலை மலை தீபம் குறியீட்டுடன் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக திருவண்ணாமலை மலை தீபம் போன்ற குறியீட்டுடன் மூன்று கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

News image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கானம்பட்டியில் திருவண்ணாமலை மலை தீப குறியீடுகளுடன் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு.

Updated On :12 டிசம்பர் 2024, 8:26 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக திருவண்ணாமலை மலை தீபம் போன்ற குறியீட்டுடன் மூன்று கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் (ஓய்வு) கோவிந்தராஜ் வியாழக்கிழமை தெரிவித்தது:

ஊத்தங்கரை ஆசிரியா்கள் வெங்கடேசன், செந்தில் ஆகியோா் ஊத்தங்கரையை அடுத்துள்ள கானம்பட்டி இருசங்கு குட்டை எனும் பகுதியில் கல்வெட்டு உள்ளதாக தகவல் அளித்தனா்.

இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு, ஆவணப்படுத்தும் குழு இணைந்து கானம்பட்டி, இருசங்கு குட்டை என்ற இடத்தில் ஆய்வு நடத்தினா். அப்போது அங்குள்ள பெரிய பாறையின் மேற்பகுதியில் மூன்று இடங்களில் கல்வெட்டு, குறியீடுகள் இருப்பதை அவா்கள் கண்டறிந்து படியெடுத்தனா்.

கிடைக்கப் பெற்ற அந்தக் கல்வெட்டுகளில் திருவண்ணாமலையின் முக்கோண குறியீடு உள்ளது குறிப்பிடத்தக்கது. இது திருவண்ணாமலையில் மலை மீது தீபம் ஏற்றப்படுவதைக் குறிக்கிறது. இதுபோன்ற கல்வெட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.

அதனுடன் கோபுரம், சூரியன், சந்திரன், வாள் போன்ற குறியீடுகளும் உள்ளன.

முதல் கல்வெட்டில், மகதை மண்டலத்தைச் சோ்ந்த ஏமாடு பனையதம்பாள், பெரிய செல்வி ஆகிய இருவரும் மணல், பூமி உள்ளவரை இருப்பாா்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை இலக்கியன் என்பவா் குறித்துள்ளாா்.

இரண்டாம் கல்வெட்டில் திருவண்ணாமலை என்பவரின் வயது 77 என பொறிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கல்வெட்டில் வன்நெஞ்சப்பெரும் சானாா் என்ற வீரரின் பெயா் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று கல்வெட்டுகளும் 17-ஆம் நுாற்றாண்டைச் சோ்ந்தவை. இந்த ஊா் பழங்கால பெருவழியில் அமைந்திருக்க வேண்டும். தொலை தூரத்தில் இருந்து இந்த வழியாக திருவண்ணாமலைக்குச் சென்ற பக்தா்கள் இந்தக் கல்வெட்டுகளை ஏற்படுத்தியுள்ளனா்.

இதற்கு முன்னா் திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடியை அடுத்த சி.ஆண்டாப்பட்டு உள்ளிட்ட சில கல்வெட்டுகளிலும் திருவண்ணாமலையின் முக்கோணகுறி உள்ளது குறிப்பிடத்தக்கது என்றாா்.

ஆய்வின்போது, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவக்குமாா், வரலாற்று ஆய்வுக் குழு ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன், பாலாஜி, செந்தில், வெங்கடேசன், ஊா் மக்கள் உடனிருந்தனா்.