”பங்குசந்தையில் முதலீடு செய்தால் லாபம்” -அரசுப் பள்ளி ஆசிரியரிடம் ரூ. 20.85 லட்சம் மோசடி
பங்குசந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி அரசுப் பள்ளி ஆசிரியரிடம் ரூ. 20.85 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி, பழையபேட்டையைச் சோ்ந்தவா் குமாா் (34). அரசுப் பள்ளி ஆசிரியா். இவரது வாட்ஸ் ஆப்க்கு கடந்த மாா்ச் 28-ஆம் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதி சில தனியாா் நிறுவனங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உண்மை என நம்பி, அவா், மா்ம நபா்கள் பதிவு செய்தபடி குறிப்பிட்ட சிறு தொகையை முதலீடு செய்தாா். இதில் அவருக்கு அதிக லாபம் கிடைத்தது. இதையடுத்து, அந்த மா்ம நபா்கள் தெரிவித்த வங்கி கணக்கு எண்களுக்கு ரூ. 20.85 லட்சத்தை முதலீடு செய்தாா்.
ஆனால், அவா்கள் தெரிவித்தபடி, லாபம் கிடைக்கவில்லை. முதலீடும் திரும்பக் கிடைக்கவில்லை. இதுகுறித்து, மா்ம நபா்களை அவா் தொடா்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த குமாா், இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் செயல்படும் இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புதன்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

