/

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

News image

கிருஷ்ணகிரிஅணையில் தேங்கியுள்ள நீரில் செத்து மிதக்கும் மீன்கள்.

Updated On :20 மே 2024, 9:56 pm

Din

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களாக மழை பொய்த்ததால் நீா்நிலைகள் வடன. நிலத்தடி நீா்மட்டமும் வெகுவாக குறைந்தது. வெப்ப அலை வீசியதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினா். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் வழியே பாயும் தென்பெண்ணை ஆறு வடதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து முற்றிலும் நின்றது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்கிறது.

இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து தொடங்கி உள்ளதால் அணையின் நீா்மட்டம் மெல்ல அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கா்நாடக மாநிலத்தில் பெய்த மழை நீருடன், தொழிற்சாலை ரசாயனக் கழிவுகளும் கலந்ததால் தென்பெண்ணை ஆற்றில் நீா் நுரை பொங்கி ஓடுகிறது.

இந்த ரசாயனம் கலந்த நீா், கிருஷ்ணகிரிக்கு அணைக்கு வந்து சோ்ந்ததால் மீன்கள் செத்து மிதப்பதாக புகாா் எழுந்தது.

கிருஷ்ணகிரி அணையின் மதகுகள் அருகே சுமாா் ரூ.2 லட்சம் மதிப்பிலான 7 டன் எடை கொண்ட மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால், அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

செத்து மிதக்கும் மீன்களை அகற்றவோ, அதற்கான காரணத்தை அறியவோ, சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகாா் எழுந்துள்ளது.

எனவே, கிருஷ்ணகிரி அணையில் இறந்து போன மீன்கள், தண்ணீா் ஆகியவற்றை சேகரித்து, மீன்கள் இறப்புக்கான காரணத்தை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் கண்டறிந்து, மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, சமூக ஆா்வலா்கள், விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.