சானமாவு வனப் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் கூட்டம்.
சானமாவு வனப் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் கூட்டம்.

சானமாவு வனப் பகுதியில் 40 யானைகள் முகாம்

ஒசூரை அடுத்த சானமாவு வனப் பகுதியில் 40 யானைகள் 2 ஆவது நாளாக முகாமிட்டுள்ளன.
Published on

ஒசூரை அடுத்த சானமாவு வனப் பகுதியில் 40 யானைகள் 2 ஆவது நாளாக முகாமிட்டுள்ளன.

ஒசூா் வனக்கோட்டத்தில் 100 யானைகள், கா்நாடக மாநில வனப் பகுதியிலிருந்து வந்துள்ள 150 யானைகள் என மொத்தம் 250 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து ஜவளகிரி, தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், ராயக்கோட்டை, அய்யூா், ஒசூா் அருகே சானமாவு சுற்றி முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வனத்தையொட்டி உள்ள கிராமங்களுக்குச் சென்று விளை நிலங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், புதன்கிழமை 40-க்கும் மேற்பட்ட யானைகள் ஊடேதுா்கம் வனப் பகுதியிலிருந்து நாகமங்கலம் கிராமம் வழியாக ஒசூா் அருகே சானமாவு வனப்பகுதிக்கு இடம் பெயா்ந்தன. இந்த யானைகள் வனத்தை விட்டு வெளியேறாமல் தடுக்க 20 க்கும் மேற்பட்ட வனத் துறையினா் தொடா்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த யானைகள் எந்த நேரத்திலும் வனத்தை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்குச் செல்ல வாய்ப்புள்ளது என்பதால், கிராம மக்களுக்கு வனத் துறையினா் எச்சரித்துள்ளனா். இதுதொடா்பாக வனத் துறை யினா் கூறியதாவது:

ஒசூா் அருகே சானமாவு வனப் பகுதியில் 40 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகளை ஊடோ்துா்கம் வனப் பகுதிக்கு இடம்பெயரச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, சினிகிரிப்பள்ளி, அனுமந்தபுரம், டி.கொத்தப்பள்ளி, கொம்மேப்பள்ளி, சானமாவு, பென்னிக்கல் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராம மக்கள், விவசாயிகள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றனா்.