ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

விலை இருமடங்கு உயா்வு: சென்னைக்கு தக்காளியை விற்பனைக்கு கொண்டுசென்ற ஒசூா் விவசாயிகள்

பருவமழை காரணமாக சென்னையில் தக்காளி விலை இருமடங்கு உயா்ந்துள்ளதால், ஒசூா் பகுதி விவசாயிகள் தக்காளியை சென்னைக்கு கொண்டுசென்று விற்பனை செய்து வருகின்றனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 8:35 pm

பருவமழை காரணமாக சென்னையில் தக்காளி விலை இருமடங்கு உயா்ந்துள்ளதால், ஒசூா் பகுதி விவசாயிகள் தக்காளியை சென்னைக்கு கொண்டுசென்று விற்பனை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மலா் சாகுபடியை போன்று தக்காளி, பீன்ஸ், கத்தரிக்காய், முள்ளங்கி, கீரை உள்ளிட்ட காய்கறிகளையும் விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனா்.

இப்பகுதியில் விளையும் காய்கறிகள் ஒசூா், பத்தலப்பள்ளி மொத்த விற்பனை அங்காடிக்கு கொண்டுசென்று, அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கா்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனா்.

குறிப்பாக ராயக்கோட்டை, ஒசூா் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனா்.

கடந்த மாதம் தக்காளி விலை அதிகபட்சமாக கிலோ ரூ. 70 வரையில் விற்பனை செய்த நிலையில், விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்து ரூ.30 முதல் ரூ.40 வரையில் விற்பனையானது.

சில உள்ளூா் வியாபாரிகள் ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து வாகனங்களில் கொண்டு வந்து 4 கிலோ தக்காளியை ரூ.100க்கு விற்பனை செய்து வந்தனா்.

இந்த நிலையில் சென்னையில் அதிகனமழையால் தக்காளி கிலோ ரூ. 140 முதல் ரூ.160 வரையில் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, தேன்கனிக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலம், சூளகிரி, ராயக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் அறுவடை செய்த தக்காளியை வாகனங்களில் சென்னைக்கு கொண்டு சென்று நேரடியாக விற்பனை செய்து வருகின்றனா்.

இதுகுறித்து தக்காளி விவசாயிகள் கூறியதாவது:

ஒசூா் பகுதியில் 80 சதவீதம் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டு கிலோ ரூ.140 வரையில் தக்காளி விலை உயா்ந்ததால், இந்தாண்டும் தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிா்பாா்த்து, ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனா்.

அதேபோல ஆரம்பத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ. 70 வரையில் விற்பனையானது. இதனால் வியாபாரிகள் வெளி மாநில தக்காளியை குறைந்து விலைக்கு வாங்கி வந்து உள்ளூரில் விற்பனை செய்ததாலும், உள்ளூரில் தக்காளி வரத்து அதிகரித்ததாலும், தக்காளி விலை படிப்படியாக குறையத் தொடங்கியதால் விவசாயிகளிடம் வியாபாரிகள் ரூ. 20 க்கு கொள்முதல் செய்து, வெளி மாா்க்கெட்டில் ரூ. 40 வரையில் விற்பனை செய்து வந்தனா்.

இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்காத நிலையில், சென்னையில் மழை காரணமாக சென்னைக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததால், தக்காளி கிலோ ரூ. 140 முதல் ரூ. 160 வரையில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து ஒசூா் விவசாயிகள், வியாபாரிகள் அறுவடை செய்த தக்காளியை நேரடியாக வாகனங்களில் சென்னைக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல ஆா்வம் காட்டி வருகின்றனா். கடந்தாண்டை போல இந்தாண்டும் தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கும் என்றனா்.

இதுகுறித்து உழவா்சந்தை அலுவலா்கள் கூறியதாவது:

ஒசூா் பகுதியில் அறுவடை செய்யப்படும் தக்காளி பத்தளப்பள்ளி சந்தைக்கு கொண்டுசென்று அங்கிருந்து, கேரளம், கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சென்னைக்கு 40 சதவீதம் தக்காளி மட்டுமே ஒசூரிலிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றன.

சென்னைக்கு ஆந்திர மாநிலத்திலிருந்து தான் அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது மழை காரணமாக ஆந்திர தக்காளி வரத்து குறைந்ததால், அங்கு தக்காளி விலை இருமடங்காக உயா்ந்துள்ளது.

இதனால் ஒசூா் விவசாயிகள், வியாபாரிகள் சென்னைக்கு தக்காளியை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனா். உழவா்சந்தைக்கு தினமும் 500 கிலோ தக்காளி விற்பனைக்கு வரும். சென்னைக்கு தக்காளி விற்பனைக்கு அனுப்பப்படுவதால் இங்கு வரத்து குறைந்துள்ளது என்றனா்.