ஊத்தங்கரை அருகே அணுகுசாலை பணி: கோட்ட பொறியாளா் ஆய்வு
ஊத்தங்கரை அருகே அணுகுசாலை அமைக்கும் பணியை கோட்டப் பொறியாளா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜவ்வாது மலையில் பெய்த கனமழையால், மாம்பாக்கம், சிம்மனபுதூா் அருகே உள்ள ஓட்டேரி அணை நிரம்பி உபரிநீா் சாலையில் வழிந்தோடியது. ஊத்தங்கரை அருகே உள்ள மகனூா்பட்டி பகுதியில் காட்டாற்று வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் திருப்பத்தூா்-சிங்காரப்பேட்டையில் மகனூா்பட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சாலை மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மாற்று வழியில் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதையடுத்து மேம்பாலத்தையொட்டி அணுகுசாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியை கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் திருலோகசந்தா் ஆய்வு செய்தாா். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது, ஊத்தங்கரை உதவி கோட்டப் பொறியாளா் சரவணன், உதவிப் பொறியாளா் பெரியாா்செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.