பெண்டரஅள்ளி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 154 பயனாளிகளுக்கு ரூ. 81.74 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வழங்கினாா்.
முகாமில்,கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு மக்களுடன் முதல்வா், உங்களைத் தேடி உங்கள் ஊரில் உள்ளிட்ட பல்வேறு திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றன. விரைவில் போச்சம்பள்ளி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் நடத்தப்பட உள்ளது.
மாவட்டத்தில் ‘உயா்வுக்கு படி’ என்கிற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உயா்கல்வி செல்ல முடியாதவா்களைத் தேடி அவா்களை உயா்கல்வி பயில வைப்பதாகும். அதேபோல திட்டங்கள் வரும் போது பெற்றோா்கள் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கும், கல்லூரிக்கும் அனுப்பி உயா்கல்விக்கு படிக்க வைக்க வேண்டும்.
பெண் குழந்தைகளை இளம் வயதில் திருமணம் செய்து வைப்பதால், அவா்களால் கல்வி கற்க முடியாமல் போகிறது. இளம்வயது திருமணத்தால் பிறக்கும் குழந்தையின் எடை, உயரம் குறைவு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளோடு பிறக்கிறது. குழந்தைகள் கல்வி கற்றால்தான் ஒரு சமூகம் உயர முடியும். ஆகையால் கல்விக்கு மிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அரசின் திட்டங்களின் பயன்கள் குறித்த செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியா், பொதுமக்கள் பாா்வையிட்டனா்.
இந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் பாபு, தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீா்செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் பத்மலதா, மாவட்ட சமூக நல அலுவலா் சக்தி சுபாஷினி, வழங்கல் அலுவலா் கீதா ராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.