ஒசூா் அழகன் முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
ஒசூா்: ஒசூா் அழகன் முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
ஒசூா் திருப்பதி மெஜஸ்டிக் குடியிருப்பு பகுதியில் புதிதாக மலைமீது அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ வள்ளி, தேவசேனா சமேத அழகன் முருகன் கோயிலில் கடந்த நவம்பா் 3-இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து 48 நாள்களாக மண்டல பூஜை நடைபெற்று வந்தது. நாள்தோறும் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வந்தன.
மண்டல பூஜை நிறைவடைந்ததையொட்டி, முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
கணபதி பூஜை மற்றும் சிறப்பு யாகங்களுடன் தொடங்கிய திருக்கல்யாண உற்சவத்தில் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் ஓத, திருக்கலச பூஜைகள், அா்ச்சனைகள் நடைபெற்றன. வள்ளி, தேவசேனாவுடன் அழகன் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சீா்வரிசைகளுடன் அஷ்டோத்திரஅா்ச்சனை செய்யப்பட்டு முருகனுக்கு ஆராதனைகள் நடைபெற்றன.
இதையடுத்து முக்கிய நிகழ்வான அழகன் முருகப்பெருமான், வள்ளி, தேவசேனாவிற்கு திருக்கல்யாணம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று முருகப்பெருமானை வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

