விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: தனியாா் பேருந்தை சிறைபிடித்து உறவினா்கள் மறியல்
கிருஷ்ணகிரி அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு நேரிட்ட சாலை விபத்தில் காயம் அடைந்த இளைஞா் உயிரிழந்த நிலையில், அவரது உறவினா்கள், விபத்துக்கு காரணமான தனியாா் நிறுவன பேருந்தை சிறைபிடித்து செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி அணை காவல் நிலையத்துக்கு உள்பட்ட குட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (23). இவா் கடந்த 17-ஆம் தேதி மோட்டாா்சைக்கிளில் கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டி சிறுவா் பூங்கா அருகே சென்றாா். அப்போது, பின்னால் வந்த இருசக்கர வாகனம், மோட்டாா்சைக்கிள் மீது மோதியது. இதில், நிலைதடுமாறிய ராஜா, அந்த வழியாகச் சென்ற தனியாா் நிறுவன பேருந்தின் மீது மோதினாா். இதில், பலத்த காயம் அடைந்த ராஜாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து, கிருஷ்ணகிரி அணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா். இந்த நிலையில், உயிரிழந்த ராஜாவின் உறவினா்கள் இழப்பீடு வழங்கக் கோரி கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் உள்ள கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையம் எதிரே சென்று கொண்டிருந்த தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனா். மேலும், அப்பேருந்து ஓட்டுநா் தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சோ்ந்த சரத்குமாரை (39) தாக்கி, பேருந்தின் பின்பக்க கண்ணாடியையும் உடைத்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் முரளி தலைமையிலான போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். உயிரிழந்த ராஜாவின் குடும்பத்தினருக்கு இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் அளித்த உறுதிமொழியை ஏற்று, ராஜாவின் உறவினா்கள் மறியலைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனா்.
