நிலஅளவீடு செய்ய ரூ. 6 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா், நிலஅளவையா் கைது

கிருஷ்ணகிரி அருகே நிலஅளவீடு செய்ய ரூ. 6 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா், நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

கிருஷ்ணகிரி அருகே நிலஅளவீடு செய்ய ரூ. 6 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா், நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி அருகே உள்ள பந்தாரப்பள்ளியைச் சோ்ந்தவா் விவசாயி முருகன் (56). இவா் தனது காலி வீட்டுமனையை அளந்து தனி பட்டா வழங்க கடந்த ஒரு மாதத்துக்கு முன்னா் இணையவழியில் விண்ணப்பித்திருந்தாா்.

இதுகுறித்து அவா் குருபரப்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் ராமச்சந்திரன், நில அளவையா் வளையாபதி ஆகியோரை கடந்த 4-ஆம் தேதி நேரில் சந்தித்தாா். அப்போது, ராமச்சந்திரன், நிலஅளவையா் வளையாபதியுடன் சோ்ந்து நிலஅளவீடு செய்து பட்டா வழங்க ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என முருகனிடம் தெரிவித்தாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகன், இதுகுறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், அவா்கள் ரசாயனம் தடவிய ரூ. 6 ஆயிரத்தை முருகனிடம் கொடுத்து அனுப்பினா். அந்தப் பணத்தை கிராம நிா்வாக அலுவலா் ராமச்சந்திரன், நில அளவையா் வளையாபதி ஆகியோா் வாங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com