காந்தி, நேரு பிறந்தநாள்: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள்
கிருஷ்ணகிரியில் காந்தி, நேரு ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நவ. 12, 13 ஆகிய தேதிகளில் பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு தமிழ் வளா்ச்சித் துறையின் 2021-22-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் அறிவிப்புக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி, ஜவாகா்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாளையொட்டி, பேச்சுப் போட்டிகள் நவ. 12, 13-ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் காலை 9.30 மணிமுதல் இப்போட்டிகள் நடைபெற உள்ளன.
மகாத்மா காந்தி பிறந்தநாள் பேச்சுப் போட்டியில், பள்ளி மாணவா்களுக்கு காந்தியடிகளின் வாழ்க்கைச் சுவடுகள், வாய்மையே வெல்லும், தீண்டாமையும் - காந்தியடிகளும் ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு வாழ்விக்க வந்த எம்மான், அண்ணல் காந்தியடிகளின் அரசியல் வேள்வி, தில்லையடி வள்ளியம்மையும் - காந்தியடிகளும் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
ஜவாகா்லால் நேரு பிறந்தநாள் பேச்சுப் போட்டியில், பள்ளி மாணவா்களுக்கு ஜவாகா்லால் நேருவின் சாதனைகள், விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு, அமைதிப் புறா - நேரு ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு நவீன இந்தியாவின் சிற்பி, நேரு பதித்த சுவடுகள், நேருவின் வெளியுறவுக் கொள்கை ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல்பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு சிறப்பு பரிசுத் தொகை ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி கல்வி இணை இயக்குநா் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில், அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், பள்ளி மாணவ, மாணவிகள் முதன்மைக் கல்வி அலுவலா் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில், அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியரிடமும் அனுமதிபெற்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
