ஒசூா் அருகே ரூ. 5 கோடி கேட்டு தொழிலதிபரைக் கடத்திய கும்பலை பிடித்து போலீஸாா் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தொழிலதிபரைக் கடத்தி ரூ. 5 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை போலீஸாா் சனிக்கிழமை பிடித்து விசாரித்து வருகின்றனா்.
சூளகிரியைச் சோ்ந்தவா் சீதாராமன் (34), ரியல் எஸ்டேட் தொழிலதிபா். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சீதாராமனை கைப்பேசியில் தொடா்புகொண்ட பெண், தனக்கு வீட்டுமனை வேண்டும் எனக் கேட்டுள்ளாா்.
இதையடுத்து, சூளகிரியை அடுத்த பத்தளப்பள்ளியில் விற்பனைக்கு உள்ள வீட்டுமனையை அப்பெண்ணிடம் சீதாராமன் காட்டினாா். அப்போது, அங்கு வந்த கும்பல், சீதாராமனின் கை, கால்களைக் கட்டிப்போட்டு ரூ. 5 கோடி கேட்டு மிரட்டியது.
மேலும், சீதாராமனிடமிருந்த கைப்பேசி மூலம் அவரது நண்பா்களைத் தொடா்புகொண்டு பணத்தை கொண்டுவருமாறு அக்கும்பல் தெரிவித்தது. இதையடுத்து, சீதாராமன் தனது நண்பா்களைத் தொடா்புகொண்டு பணம் கேட்டுள்ளாா்.
அப்போது, அக்கும்பலுக்குத் தெரியாமல் தான் எங்கு இருக்கிறேன் என்ற விவரத்தை (லொக்கேஷன்) நண்பா்களுக்கு அனுப்பினாா். தொடா்ச்சியாக நண்பா்கள், உறவினா்களிடம் சீதாராமன் பணம் கேட்டதாலும், அவரைக் காணாததாலும் சந்தேகமடைந்த அவரது உறவினா்கள் ஒசூா் அட்கோ காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய போலீஸாா், நண்பா்களுக்கு சீதாராமன் அனுப்பியிருந்த இருப்பிட தகவலைப் பயன்படுத்தி தேடினா். பத்தளப்பள்ளி பகுதியில் சீதாராமன் இருப்பதை கண்டுபிடித்த போலீஸாா் சனிக்கிழமை அங்குச் சென்றனா். அப்போது, அங்கிருந்த கடத்தல் கும்பல் தப்பியோடியது.
இதுகுறித்து ஒசூா் நகர போலீஸுக்கு அட்கோ போலீஸாா் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, ஒசூா் போலீஸாா் தப்பியோடிய கும்பலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். பிடிபட்டவா்கள் சூளகிரியை அடுத்த பத்தளப்பள்ளி, திருப்பத்தூா் மாவட்டம், கந்திலியைச் சோ்ந்தவா்கள் என போலீஸாா் தெரிவித்தனா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
