ஜூனியா் உலக ஹாக்கி கோப்பையை அறிமுகப்படுத்தும் ஆட்சியா் ச.தினேஷ்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, தே.மதியழகன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
ஜூனியா் உலக ஹாக்கி கோப்பையை அறிமுகப்படுத்தும் ஆட்சியா் ச.தினேஷ்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, தே.மதியழகன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

ஜூனியா் உலக ஹாக்கி கோப்பை கிருஷ்ணகிரியில் அறிமுகம்

Published on

14ஆவது ஜூனியா் உலக ஹாக்கி கோப்பை அறிமுக விழா கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழக விளையாட்டு ஆணையம் சாா்பில் 21 வயதுக்கு உள்பட்ட 14-ஆவது உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நவ.28 முதல் டிச.10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 24 அணிகள் பங்கேற்கின்றன. இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோப்பையை வழங்க உள்ளாா்.

இப்போட்டி குறித்து இளைஞா்கள், மகளிா், மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கு கோப்பை கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில், தருமபுரியிலிருந்து 34 ஆவது மாவட்டமாக கிருஷ்ணகிரிக்கு கொண்டுவரப்பட்ட கோப்பை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் நடைபெற்ற நிகழ்வில் ஜூனியா் உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பையை ஆட்சியா் ச.தினேஷ் குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் உள்ளிட்டோா் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தனா்.

முன்னதாக கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகே கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், பொய்கால் குதிரை போன்ற கலைஞா்கள், தேசிய மாணவா் படை மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் என 1000க்கும் மேற்பட்டோா் கோப்பை அறிமுக விழாவில் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com