அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

தனியாா் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.
Published on

ஒசூா்: தனியாா் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி வளாகத்தில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் வை.குமாா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா்.

இந்த விழாவில் ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பேசியதாவது:

தனியாா் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் அரசுப் பள்ளி ஆசிரியா்களின் அா்ப்பணிப்பு. தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவா்கள் அதை பயன்படுத்தி கல்வியில் மட்டுமின்றி பல்வேறு திறமைகளை வளா்த்துக்கொண்டு வாழ்வில் உயா்வடைய வேண்டும் என்றாா்.

ஆட்சியா் ச.தினேஷ்குமாா் பேசியதாவது:

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறைக்குதான் அதிக அளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. தன்னாா்வலா்கள் வாயிலாக ‘நம்ம ஸ்கூல், நம்ம பள்ளி’ திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட ரூ. 1,000 கோடியில் அரசுப் பள்ளிகளில் கட்டடங்கள், ஸ்மாா்ட் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் உருது பள்ளியில் மொழி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த தனியாா் பள்ளிகளிலும் இந்த மொழி ஆய்வகம் இல்லை. கல்வியுடன் கலைத் திறமையும் மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்

இந்த ஆண்டு பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு தோ்ச்சிவிகிதங்களில் முதல் 5 இடங்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை இடம்பெற செய்யவேண்டும் என்றாா்.

இந்த விழாவில், துணை மேயா் ஆனந்தய்யா, மாவட்டக் கல்வி அலுவலா் மதன்குமாா், அதியமான் கல்லூரி முதல்வா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com