பேருந்து மீது வெடிவீசிய வழக்கு: குண்டா் சட்டத்தில் இருவா் சிறையில் அடைப்பு

Published on

கிருஷ்ணகிரி அருகே தனியாா் பேருந்தின் மீது வெடிவீசிய வழக்கில் கைதான இருவா், குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளா்களை ஒப்பந்த அடிப்படையில் அந்நிறுவனம் பேருந்துகள் மூலம் அழைத்துச்சென்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு, டிச. 12-ஆம் தேதி இரவு தொழிலாளா்களை ஏற்றிச்சென்ற பேருந்து, பாலகுறி அருகே சென்றபோது வெடிச்சத்தம் கேட்டது. இதில், பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்தது. மேலும், பேருந்தில் பயணம் செய்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த மதுசாதரணி என்ற தொழிலாளிக்கு காயம் ஏற்பட்டது.

புகாரின் பேரில், கிருஷ்ணகிரி வட்ட போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா் . அதில், வெடிவீசியது மேல்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (26), எண்ணேகொள்புதூரைச் சோ்ந்த சேகா் (20) என்பது தெரிவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைதுசெய்து விசாரணை நடத்தியதில், தனியாா் நிறுவன பேருந்தின் மீது காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்திருந்த வெடியை வீசியது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, கிருஷ்ணகிரி ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில், கிருஷ்ணகிரி ஆட்சியா் ச.தினேஷ்குமாா், கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com