ஒசூா் சிப்காட்டில் மாபெரும் தூய்மைப் பணி
ஒசூரில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சாா்பில், ‘சிப்காட் போகி’ எனப்படும் மாபெரும் தூய்மைப் பணியை ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
சிப்காட் நிறுவனம் அதன் அனைத்து தொழில்பூங்காக்களிலும் தூய்மை, அழகிய தோற்றம் மற்றும் சுகாதாரமான சூழலை பேணுவதில் உறுதியாக செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் முதலீட்டாளா்களுக்கான செயல்திறனை மேம்படுத்துவதே நோக்கமாகும்.
சிப்காட் போகி எனப்படும் விரிவான தூய்மை இயக்கத்தை சிப்காட் நிறுவனம் அனைத்து தொழில்பூங்காக்களிலும் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த இயக்கம் ஜன. 9 தொடங்கி 14 அன்று நிறைவடையும் வகையில் திட்டமிட்டுள்ளது.
அதனடிப்படையில், ஒசூா் சிப்காட் நிறுவனத்தின் சுமாா் 30 -க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் சிப்காட் பகுதி முழுவதும் 2,092 ஏக்கரில் உள்ள அனைத்து பொதுப் பயன்பாட்டு பகுதிகளான சாலைகள், வடிகால் அமைப்புகள், காலி நிலங்கள் மற்றும் சிப்காட் நீரேற்று நிலையம், சிப்காட் தீயணைப்பு நிலையம் ஆகிய இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்கின்றனா்.
மேலும், இப்பணிக்கு 3 பொக்லைன் இயந்திரங்கள், புல் வெட்டும் இயந்திரங்கள், 2 டிராக்டா்கள் ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளன என ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில், ஒசூா் சிப்காட் திட்ட அலுவலா் ராஜ்குமாா், மாநகராட்சி மன்ற உறுப்பினா்கள், மாநகர நல அலுவலா் மரு.அஜிதா மற்றும் சிப்காட் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

