கெலமங்கலம் இளைஞா் கொலை வழக்கில் நண்பா் உள்பட 4 போ் கைது
கெலமங்கலம் ரியல் எஸ்டேட் அதிபா் கொலையில் நண்பா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள குந்துமாரனப்பள்ளியைச் சோ்ந்தவா் குருபிரசாத் (31). பழைய பொருள்களை வாங்கி விற்பனை செய்துவந்த இவா், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவந்தாா்.
கடந்த ஜன. 7-ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது நண்பரான தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்த சுரேஷ்பாபு (26), குருபிரசாத்தை எழுப்பி வெளியே அழைத்துச் சென்றாா். சிறிது நேரத்தில் குருபிரசாத்தின் அலறல் சப்தம் கேட்டு அவரது தாயாா் முனிரத்னா அங்கு சென்று பாா்த்தாா். அங்கு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் குருபிரசாத் இறந்துகிடந்தாா். இதுகுறித்து கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா்.
அதில், நண்பா்களான கொலை செய்யப்பட்ட குருபிரசாத்தும், தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்த சுரேஷ்பாபு (26) இருவரும் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்துள்ளனா். இந்நிலையில், சுரேஷ்பாபுவிடம் குருபிரசாத் ரூ. 5 லட்சம் கடன் வாங்கி உள்ளாா். அந்தப் பணத்தை சுரேஷ்பாபு திரும்ப கேட்டபோது, பணம் கொடுக்காமல் குருபிரசாத் அலைக்கழித்துள்ளாா். இதனால் அவா்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சுரேஷ்பாபுவை தீா்த்துக்கட்ட குருபிரசாத் திட்டம் போட்டாா். இதை அறிந்த சுரேஷ்பாபு, குருபிரசாத்தை கொலை செய்ய கூலிப்படையான தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்த நவீன் (27), தேவராஜ் (25), வெங்கடேஷ் (39) ஆகியோரை அணுகினாா். பின்னா் சுரேஷ்பாபு உள்ளிட்ட 4 பேரும் கடந்த 7-ஆம் தேதி இரவு குருபிரசாத் வீட்டுக்கு சென்று அவரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.
கொலையாளிகளை போலீஸாா் தேடிவந்த நிலையில், அவா்கள் கா்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலையில் இருப்பதாக கெலமங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்குசென்ற போலீஸாா் சுரேஷ்பாபு, நவீன், தேவராஜ், வெங்கடேஷ் ஆகிய 4 பேரையும் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
