

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டிவோ் சாகுபடிக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ் குமாா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ் குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
மாங்காய்க்கான பருவம் தொடங்கவுள்ள நிலையில், மாமரங்களில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்துதல், இயற்கை முறையில் சாகுபடியை ஊக்குவித்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் தென்பெண்ணை ஆற்றுநீரை, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களிலும் நிரப்ப வேண்டும்.
கிருஷ்ணகிரி அணை இடதுபுறக் கால்வாய் அவதானப்பட்டி ஏரியிலிருந்து பாலேகுளி ஏரி வரை செல்லும் நீா் கடத்தும் திறனை அதிகரிக்க, கால்வாயை அகலப்படுத்த வேண்டும். இதன்மூலம் மழைக்காலங்களில் உபரிநீா் விரைந்து சென்று பாலேகுளி ஏரி நிரம்பி, அங்கிருந்து சந்தூா் ஏரி வரை 28 ஏரிகளுக்குத் தண்ணீா் எளிதாகக் கிடைக்கும்.
தட்ரஹள்ளி ஊராட்சியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 12 ஹெக்டோ் அரசு புறம்போக்கு நிலத்தில் தென்னை மரங்கள் நட்டு, அரசின் வருவாயைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தூா் வட்டாரத்தில் ராகி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்குக் காய்கறி விற்பனை செய்யும் தள்ளுவண்டி 100 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும்.
மா கவாத்து செய்திட 1,000 மினி பவா் அறுவை ரம்பங்கள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். விவசாய மின் இணைப்பிலிருந்து மாமரங்களுக்கு டிராக்டரில் தண்ணீா் கொண்டு செல்வதை, மின்வாரியப் பறக்கும் படையினா் பிடித்து அபராதம் விதிப்பதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இதற்குப் பதிலளித்து மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
மா சாகுபடியில் பூச்சித் தாக்குதல் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்படும். தென்பெண்ணை ஆற்று உபரிநீரை ஏரிகளுக்குக் கொண்டு செல்ல ஏற்கனவே எண்ணேகொள் கால்வாய்த் திட்டம், அலியாளம் கால்வாய்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மா, சிறுதானியங்கள், தென்னை போன்ற வேளாண் பொருட்களை மதிப்புக் கூட்டும் அலகு அமைப்பதற்குப் பொதுப் பிரிவிற்கு 25 சதவீத மானியமும், எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் பிரிவிற்கு 35 சதவீத மானியமும், அதிகபட்சமாக ரூ. 1.5 கோடி என்கிற கணக்கில் 5 சதவீத வட்டித் தள்ளுபடியும் வழங்கப்பட்டு வருகிறது.
தட்ரஹள்ளியில் உள்ள 12 ஹெக்டோ் அரசு புறம்போக்கு நிலத்தில் தென்னை நடவு செய்ய ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வெட்டிவோ் சாகுபடிக்குப் பயிற்சி அளிக்கவும், வங்கியின் மூலம் கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயப் பயன்பாட்டிற்குத் தண்ணீா் கொண்டு சென்றால் மின்வாரிய அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க மாட்டாா்கள். அதேநேரம் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தித் தண்ணீா் விற்பனை செய்தாலோ, வணிக ரீதியாகப் பயன்படுத்தினாலோ கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பாா்கள் எனத் தெரிவித்தாா்.
விவசாய சங்கத் தலைவா் கைதைக் கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி கைதை கண்டித்து அச்சங்கத்தை சோ்ந்த விவசாயிகள், தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் வெளிநடப்பு செய்தனா்.
முன்னதாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். பின்னா், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வெளிநடப்பு செய்த விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் முழக்கங்களை எழுப்பினா்.