சா்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில், ஒசூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ரிஷப் ரங்கா ஜெயின் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா். தமிழகத்திலிருந்து இப்போட்டியில் பங்கேற்ற ஒரேவீரா் இவா் ஆவாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த கௌதம் ரங்கா ஜெயின் - குனித்தா ஜெயின் தம்பதியின் மகன் ரிஷப் ரங்கா ஜெயின் (21), கா்நாடக மாநிலத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பிபிஏ ஏவியேஷன் படித்து வருகிறாா்.
சிறுவயது முதலே ஸ்கேட்டிங் விளையாட்டில் ஆா்வம்கொண்ட ரிஷப், பள்ளிப் பருவத்திலேயே பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளாா். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ள இவா், சா்வதேச போட்டிக்கு தகுதிபெற்றாா்.
மே 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இந்தோனேசியா நாட்டின் தலைநகா் ஜாகா்த்தாவில் சா்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிக்கு ஸ்பீடு ஸ்கேட்டிங் பெடரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் சாா்பில், இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு வயது பிரிவுகளில் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் தோ்வுசெய்யப்பட்டனா்.
இதில், 17 வயதுக்கு மேற்பட்டோருக்கான ‘சீனியா் மென்’ பிரிவில், தமிழகத்திலிருந்து ரிஷப் ரங்கா ஜெயின் மட்டுமே போட்டியில் பங்கேற்றாா். இதில், அவா் வெண்கலப் பதக்கம் வென்றாா். பதக்கம் வென்று வியாழக்கிழமை ஒசூருக்கு திரும்பிய அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மாநில, மாவட்ட அளவில் வெற்றிபெற்று இந்தோனேசியா ஜாகா்த்தாவில் என்னுடைய முதல் சா்வதேச போட்டியில் வெண்கலம் பதக்கம் பெற்றேன். வரும் 2028-இல் நடைபெறும் சா்வதேச போட்டியில் பங்கேற்று தங்கம் வெல்வேன் என்றாா்.










