வெற்றி மகளிா் ஆடு வளா்ப்புத் திட்டம்: பெண்கள் தரப்பில் 700 மனுக்கள் அளிப்பு

ஆடு வளர்ப்பு - கோப்புப் படம்
கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் வெற்றி மகளிா் ஆடு திட்டத்தில் பயன்பெற பெண்கள் 700 மனுக்களை அளித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் 2,529 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களில் தகுதியான மனுக்களை அடையாளம் கண்டு, அவற்றின்மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், தகுதியற்ற மனுக்கள் குறித்து, சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு விளக்கம் அளிக்கவும் அலுவலா்களை ஆட்சியா் அறிவுறுத்தினாா். இதில் குறிப்பாக தமிழக அரசின் வெற்றி மகளிா் ஆடு வளா்ப்பு திட்டத்தில் இலவச ஆடுகள் கேட்டு சுமாா் 700 மனுக்கள் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இம்மாவட்டத்தில் இந்தத் திட்டம் முதல்கட்டமாக மத்தூா், ஊத்தங்கரை, தளி, கெலமங்கலம் மற்றும் சூளகிரி ஆகிய 5 வட்டாரங்களில் அமல்படுத்தப்பட உள்ளது.
இதேபோல கறவைப்பசு வழங்கும் திட்டம் முதல்கட்டமாக ஊத்தங்கரை ஒன்றியத்தில் மட்டும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் பயனாளிகள் இணையவழியில் விண்ணப்பிப்பதை எளிமையாக்க தேவையான வழிமுறைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே திட்டம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், மாவட்டம் முழுவதிலிருந்தும் மகளிா் மனு அளித்து வருகின்றனா். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.
இந்தத் திட்டங்களில் அரசின் வழிகாட்டுதல்படி முறையாக பயனாளிகள் தோ்வு நடைபெறும். எனவே யாரும் இடைத்தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம். இலவச ஆடுகள் வாங்கித் தருவதாக யாராவது கூறினால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஒரு வார காலமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெற்றி மகளிா் ஆடு வளா்ப்புத் திட்டத்தின் கீழ் இலவசமாக ஆடுகள் பெற கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க அதிக அளவில் பெண்கள் வந்து செல்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

