மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!எச்பிவி தடுப்பூசி முயற்சியில் இந்தியா புதிய மைல்கல்! புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த கனிமொழி எம்.பி.! கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்- விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டெல்டா விவசாயிகளின் குறைகளைக் கேட்க திமுக சார்பில் குழு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புபுத்தக கொள்முதல் முறைகேட்டில் மேலும் 2 பதிப்பகங்ளுக்கு தொடர்பு: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்ஜார்க்கண்டில் கிராம மக்கள் கல்வீச்சு: 12 காவலர்கள் காயம் இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்து

மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!

கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவடைந்ததாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறித்து...

Chennai metro train

சென்னை மெட்ரோ ரயில் - ENS

Updated On :

கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவடைந்ததாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திங்கள்கிழமை (நவ. 23) தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில், வழித்தடம் 5-இல் ஒரு முக்கிய மைல்கல்லாக, கோயம்பேடு சந்தை மெட்ரோ முதல் ஆலந்தூர் மெட்ரோ வரையிலான சுமார் 9.5 கி.மீ. நீளமுள்ள உயர்மட்டப் பாதையில் அனைத்து யூ-கார்டர்களையும் பொருத்தும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதன் கடைசி யூ-கார்டர் நேற்று (22.11.2026) பட் ரோடு மற்றும் கத்திப்பாராக்கு இடையில் பால் வெல்ஸ் சாலையில் பொருத்தப்பட்டது. இந்த இறுதி யூ-கார்டர், தலா 550 மெட்ரிக் டன் திறன் கொண்ட இரண்டு அதிகத் திறன் வாய்ந்த ஹைட்ராலிக் கிரேன்களைப் பயன்படுத்தி வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.

இந்தப் பாதையில் மொத்தம் 606 யூ-கார்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் நீளம் 15 மீட்டர் முதல் 33.33 மீட்டர் வரை உள்ளது. ஒவ்வொரு யூ-கார்டரின் சராசரி எடை சுமார் 135 மெட்ரிக் டன் ஆகும். அந்தந்த நிலப்பரப்பு மற்றும் அதன் தேவைகளுக்கு ஏற்ப, லாஞ்சிங் கார்டர்கள் மற்றும் உயர் திறன் கொண்ட ஹைட்ராலிக் கிரேன்கள் உள்ளிட்ட பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி யூ-கார்டர்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

போக்குவரத்து நெரிசல், பூமிக்கு அடியிலும் மேலேயும் செல்லும் பயன்பாட்டுக் கம்பிகள் மற்றும் குழாய்கள், கடுமையான இடப்பற்றாக்குறை மற்றும் காளியம்மன் கோயில் தெரு, பட் ரோடு, பால் வெல்ஸ் சாலை போன்ற இடங்களில் நிலவிய கடினமான கட்டுமானச் சூழல்கள் என இந்தப் பாதையில் பல முக்கியச் சவால்கள் இருந்தன. மேலும், மவுண்ட் பூவிருந்தவல்லி சாலையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த மேம்பாலம் இப்பணியை மேலும் சிக்கலாக்கியது; இதனால் கார்டர் பொருத்தும் பணிகள் மிகவும் சவாலானதாக அமைந்தன.

மேல் வழித்தடத்தில் உள்ள பி399-பி400 ஆகிய இரு தூண்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இறுதி யூ-கார்டர் பொருத்தும் பணி மிகவும் சவாலானதாக இருந்ததுடன், அதற்கு ஒரு வழக்கத்திற்கு மாறான பொறியியல் தீர்வு தேவைப்பட்டது.

வழக்கமான முறையில் இரண்டு உயர் திறன் கொண்ட கிரேன்களை நிறுத்துவதற்குப் போதிய இடவசதி இல்லை. இதனைச் சமாளிக்க, திட்டக் குழுவினர் புதுமையான கிரேன் நிறுத்தும் உத்தியைக் கையாண்டனர். அதன்படி, ஒரு கிரேன் தேவாலய வளாகத்திற்குள்ளும், மற்றொரு கிரேன் அருகிலிருந்த குறுகிய தெருவிலும் நிறுத்தப்பட்டது. வாக்கி-டாக்கிகள் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு, துல்லியமான ஒருங்கிணைப்புடன் யூ-கார்டரைத் தூக்கிப் பொருத்தும் பணிகள் எவ்வித இடையூறுமின்றி மேற்கொள்ளப்பட்டன.

பால் வெல்ஸ் சாலையில் உள்ள பி380-பி381 ஆகிய இரு தூண்களுக்கு இடைப்பட்ட பகுதியில் மற்றொரு முக்கியச் சவால் எதிர்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் நிலவிய கடுமையான இடநெருக்கடியுடன், அருகில் பள்ளி மற்றும் குடியிருப்புக் கட்டடங்கள் அமைந்திருந்ததால், யூ-கார்டர்களைப் பொருத்துவதற்குத் தேவையான கிரேன்களை உயர்மட்டப் பாதையில் நிறுத்துவதற்குப் போதிய இடவசதி இல்லை.

இந்தச் சவாலைச் சமாளிக்க, திட்டக் குழுவினர் பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியைத் தற்காலிகமாகப் பயன்படுத்தி, கிரேன்களை நிறுத்தி யூ-கார்டர்களைப் பொருத்தும் பணிகளை மேற்கொண்டனர். இதற்காக, பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் கட்டடங்களுக்கு இடையிலான இணைப்புப் பாதைகள் இடிக்கப்பட்டன. விஜயதசமி விடுமுறை நாட்களில் மட்டுமே இப்பணிகளை மேற்கொண்டு, பள்ளி மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பாகப் பாதிக்கப்பட்ட அனைத்து கட்டமைப்புகளையும் மீண்டும் சீரமைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால், திட்டக் குழுவினருக்கு மிகவும் குறுகிய கால அவகாசமே கிடைத்தது.

மேலும், இப்பணிக்கு பயன்படுத்த இருந்த 550 மெட்ரிக் டன் தூக்கும் திறன் கொண்ட உயர் திறன் கிரேன்களால், தேவையான தொலைவை எட்ட முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, இப்பணிக்காக பிரத்யேகமாக 1,000 மெட்ரிக் டன் தூக்கும் திறன் கொண்ட சிறப்பு கிரேன் கண்டறியப்பட்டு கொண்டு வரப்பட்டது.

இத்தகைய பல்வேறு சவால்கள் மற்றும் இடையூறுகளையும் துல்லியமான திட்டமிடல், புதுமையான பொறியியல் தீர்வுகள், சிறந்த ஒருங்கிணைப்பு, பல்வேறு தொடர்புடைய தரப்பினருடனான ஒத்துழைப்பு, பயன்பாட்டுக் கட்டமைப்புகளை உரிய நேரத்தில் இடமாற்றம் செய்தல், போக்குவரத்து மேலாண்மை, சாலை மாற்றுப்பாதைகள் மற்றும் தேவையான வளங்களை உரிய நேரத்தில் ஏற்பாடு செய்தல் ஆகியவற்றின் மூலம் திட்டக் குழுவினர் வெற்றிகரமாகச் சமாளித்தனர். இதன் மூலம், அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகர்ப்புறச் சூழலில் சிக்கலான உள்கட்டமைப்புப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன என்று அதில் குறிப்ப்டப்பட்டுள்ளது.

Summary

Chennai Metro Rail administration stated on Monday (Nov. 23) that the work of installing U-girders between Koyambedu Market and Alandur has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.