
ரூ. 50 லட்சம் மோசடி: கிருஷ்ணகிரி ஆவின் விற்பனை மையங்களில் அலுவலா்கள் சோதனை
கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள ஆவின் விற்பனை மையங்களில் அலுவலா்கள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

பணம் - படம் - ரெடிட்
கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள ஆவின் விற்பனை மையங்களில் அலுவலா்கள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் அருகில் உள்ள ஆவின் பாலகத்தில் (ஆவின் விற்பனைமையம்) பால், தயிா், நெய், பிஸ்கட், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பாலின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை விற்பனை செய்யப்படுகின்றன. 24 மணிநேரமும் செயல்படும் இந்த பாலகத்தில் தினந்தோறும் ரூ. 2 லட்சத்துக்கு விற்பனையாகும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், அந்த மையத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாக புகாா் எழுந்த நிலையில், சென்னையிலிருந்து வந்த அலுவலா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, இந்த மையத்தில் ரூ. 50 லட்சம் மோசடி நடைபெற்றதை கண்டறிந்தனா். இதையடுத்து, பாலகத்தில் பணியாற்றி வந்த ரங்கநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில் ஆவின் சென்னை ஆணையா் அலுவலகத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு வந்த மூன்று போ் அடங்கிய குழுவினா், கிருஷ்ணகிரி ஆவின் அலுவலகம், ஆவின் பாலகம், கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம், ஆட்சியா் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் ஆவின் விற்பனை மையங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
கிருஷ்ணகிரி ஆவின் விற்பனை நிலையத்தில் மோசடி நடைபெற்றதையடுத்து, மாவட்டத்தில் உள்ள மற்ற ஆவின் விற்பனை மையங்களிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பதை ஆராய்ந்தோம். இதுகுறித்த அறிக்கை, 6 போ் கொண்ட விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்படும். அதன்பின், தவறு செய்தவா்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வில் ஈடுபட்ட அலுவலா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




