தேசிய இளையோர் பூப்பந்தாட்டப் போட்டி: தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த தேசிய சாம்பியன்

தேசிய இளையோர் பூப்பந்தாட்டப் போட்டியில் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த தேசிய சாம்பியன் பட்டம் வென்றது. 
Published on
Updated on
2 min read

தேசிய இளையோர் பூப்பந்தாட்டப் போட்டியில் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த தேசிய சாம்பியன் பட்டம் வென்றது. 
 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்கள், அகில இந்திய பூப்பந்தாட்ட கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழகம் இணைந்து நடத்திய தேசிய அளவிலான 64ஆவது இளையோர் பிரிவு ஆடவர்,  மகளிர் பூப்பந்தாட்டப் போட்டிகள் எக்ஸல் கல்வி நிறுவன விளையாட்டு அரங்கில் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. 
 போட்டியின் 4ஆவது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு 35-29, 35-26 என்ற புள்ளிக்கணக்கில் ஆந்திர மாநில அணியை வென்றது.  மற்றொரு அரையிறுதிப் போட்டியில் கர்நாடக மாநில அணி 35-25, 35-17  என்ற புள்ளிக்கணக்கில் கேரள அணியை வெற்றி கொண்டது.
 புதன்கிழமை நடந்த மகளிர் பிரிவு இறுதியாட்டத்தில் தமிழ்நாடு அணி, கர்நாடக மாநில அணியை எதிர் கொண்டது.   இதில் தமிழ்நாடு அணி, 35-32, 35-32 என்ற புள்ளிக்கணக்கில் கர்நாடக அணியை வென்று,  மகளிர் பிரிவு தேசிய சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.  கடந்த ஆண்டும் தமிழ்நாடு மகளிர் பிரிவில் தமிழ்நாடு அணி தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஆடவர்  பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி,  கேரள மாநில அணியை 35-29, 35-29 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.  மற்றொரு அரையிறுதி போட்டியில் ஆந்திர மாநில அணி,  கர்நாடக அணியை வென்றது.  
  இறுதியாட்டத்தில் தமிழ்நாடு ஆந்திர மாநில அணியை எதிர்கொண்டது.   ஆந்திர மாநில அணி 35-29, 35-29 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ்நாடு அணியை வென்றது.  இதன் மூலம் ஆடவர் பிரிவில் ஆந்திர மாநில அணி தேசிய சாம்பியன் பட்டம் வென்றது.  இரட்டையர் ஆட்டத்தில் ஆடவர், மகளிர் பிரிவுகளில் தமிழ்நாடு அணிகள் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் ஜம்மு காஷ்மீர், ஹரியாணா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட்,  ஆந்திரம்,  மேற்கு வங்கம், தெலங்கானா,  உத்தரப்பிரதேசம், ஒடிசா,  கர்நாடகம், கேரளம், பஞ்சாப்,  தில்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரம், பிஹார்,  திரிபுரா, புதுச்சேரி, குஜராத், கோவா உள்பட 25 மாநிலங்களில் இருந்து மாணவ, மாணவியரை கொண்ட 49 அணியினர், குழு மேலாளர்கள்,  தேசிய முதன்மை நடுவர்கள், பூப்பந்தாட்டக் கழக தேசிய, மாநில நிர்வாகிகள் சுமார்  750 பேர் பங்கேற்றனர்.
போட்டிகளைத் தொடர்ந்து புதன்கிழமை மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.   விழாவிற்கு தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழகத் தலைவரும், எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவருமான ஏ.கே.நடேசன் தலைமை வகித்தார்.  இயக்குநர்(நிர்வாகம்) வி.கே.சண்முகநாதன் வரவேற்றார். அகில இந்திய பூப்பந்தாட்ட கூட்டமைப்பின் துணைத் தலைவர் பாங்கடே, தலைமை பயிற்சியாளர் தாண்டவ கிருஷ்ணா ஆகியோர் வாழ்த்திப்பேசினர். 
 ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு அணி,  மற்றும் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு பரிசுகளை வழங்கினார்.  போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக பொதுச் செயலர் வி.எழிலரசன்,  துணைத் தலைவர்  ஏ.சீனிவாசன், பொருளாளர் இ.பார்த்தீபன்,  நாமக்கல் மாவட்டத் தலைவர் என்.முருகேசன், செயலர் எம்.சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.