குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் உடமைகளுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியேற்றப்பட்டு, மேடான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
மேட்டூர் அணைக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் வெள்ளப் பெருக்கால் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு வெளியேற்றப்பட்ட நீரின் அளவானது விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியிலிருந்து 30 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதால், காவிரிக் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந் நிலையில், குமாரபாளையம் வட்டாட்சியர் ஆர்.ரகுநாதன் தலைமையில் குமாரபாளையம், பள்ளிபாளையம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய ஒலிபெருக்கியின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், குமாரபாளையம் மணிமேகலைத் தெரு பகுதியில் கரையோரத்தில் வசித்தவர்கள் மேடான பகுதிகளுக்கு உடமைகளுடன் வெளியேற்றப்பட்டனர்.
மேலும், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் பாதிக்கப்படுவோர் தங்க புத்தர் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந் நடவடிக்கையில், நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் குமரவேல் மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







