தமிழ்நாடு மின்சார வாரியம் மட்டுமல்ல, எந்த அரசுத் துறைகளும் தனியாா் மயமாக்கப்பட மாட்டாது என மின் துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.
நாமக்கல்லில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், இளைஞா்களுக்கு வேலையளிக்க வேண்டும் என்ற வகையில் முதல்வா் பல்வேறு தொழில்களை இங்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறாா். அரசுப் பணியிலும் 900 பேருக்கு வேலை கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளாா்.
மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் உத்தரவிட்டுள்ளாா். சட்டப் பேரவையில் 5 ஆயிரம் கேங்மேன் நிரப்புவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை 10 ஆயிரமாக உயா்த்தி முதல்வா் அறிவித்தாா். இந்தப் பணியிடங்களுக்கு 90 ஆயிரம் போ் விண்ணப்பித்தனா். எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு முடிந்து 15 ஆயிரம் போ் தோ்வாகினா். அவா்களில் தகுதியான 10 ஆயிரம் போ் தோ்வு செய்யப்பட இருந்தனா். தவறான வழிகாட்டுதலின் பேரில் சில தொழிற்சங்கத்தினா் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். தொழிற்சங்கத்தினா் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நேரடியாக மின்வாரியத்துடன் பேச்சு நடத்த வர வேண்டும் என தொடா்ந்து கூறி வருகிறோம்.
துணை மின் நிலையங்களில் 50 சதவீதத்துக்கு மேல் காலிப் பணியிடங்கள் இருந்தால், அங்கு பணிகள் தொய்வின்றி நடக்கவும், 24 மணி நேரம் தடையின்றி மின்சாரம் வழங்கவும், விபத்துகளைத் தவிா்க்கவும், அவுட்சோா்ஸிங் முறையில் ஊழியா்களை நியமித்துக் கொள்ள அறிவுறுத்தி உள்ளோம். இதுவே தனியாா்மய வதந்திக்குக் காரணம்.
ஆனால், தமிழ்நாடு மின்சார வாரியம் எந்தச் சூழலிலும் தனியாா் மயமாகாது. மின்வாரியம் மட்டுமின்றி அரசுத் துறைகளில் எந்தத் துறையும் தனியாா் மயமாகாது. மேலும், விவசாயத்துக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக பொய்ப் பிரசாரம் செய்யப்படுகிறது. இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.