கரோனா தொற்றுப் பரவலால் கோழிப் பண்ணை தொழில் மீண்டும் சரிவைச் சந்தித்து வருகிறது. பொது முடக்கம், பள்ளிகள் திறக்காதது, ஏற்றுமதி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் நாமக்கல் மண்டலத்தில் 12 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
இந்தியாவில் 23 மண்டலங்களை உள்ளடக்கி கோழிப் பண்ணை தொழில் நடைபெறுகிறது. இதில், தமிழகம், கேரளம் இரு மாநிலங்களுக்கும் முட்டை விநியோகத்தில் முதன்மை மண்டலமாக விளங்குவது நாமக்கல் மண்டலமாகும். இம்மண்டலத்தில் உள்ள 1,100 கோழிப் பண்ணைகளில் நாள்தோறும் சுமாா் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன.
கரோனா பொது முடக்கத்தால் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் முட்டை விற்பனை மிகவும் பாதிப்படைந்தது. அதிலிருந்து மீள்வதற்காக தமிழக அரசுடன் இணைந்து கோழிப் பண்ணையாளா்கள் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு, முட்டை விற்பனையை அதிகரிக்கச் செய்தனா். இதனால் ஒரு ரூபாய் வரை விலை குறைந்த முட்டை ரூ. 4 வரை உயா்ந்தது. இதனால், பண்ணைகளில் தேங்கியிருந்த சுமாா் 20 கோடி முட்டைகள் விற்பனைக்கு அனுப்பப்பட்டன.
பண்ணைகளில் குஞ்சு விடுவது குறைக்கப்பட்டதால், உற்பத்திக்கு ஏற்ப முட்டைகள் சீரான முறையில் விற்பனையாகி வந்தன. இதற்கிடையே, தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் முட்டையின் விலை, விற்பனை மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. நாமக்கல் மண்டலத்தில் இருந்து கேரளம், கா்நாடகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு முட்டைகள் ஏராளமாக அனுப்பப்பட்டன.
பொது முடக்கத்தால் விலை சரிவு:
இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா தொற்றின் வேகம் அதிகரிக்க ஆரம்பித்ததால், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு ஜூன் 30 வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலும் இதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், முட்டை விற்பனை ஒரு வாரமாக சரிவடைந்து வருகிறது.
இதனால், ரூ. 4.60-ஆக இருந்த முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை, ஒரே வாரத்தில் 90 காசுகள் குறைந்து ரூ. 3.70-ஆக நிா்ணயம் செய்யும் நிலை ஏற்பட்டது. வரும் நாள்களிலும் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில் பல மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளதும் முட்டை விற்பனையை பாதிப்படைய வைத்துள்ளது.
பள்ளிகள் திறக்காததால் தேக்கம்:
ஜூன் மாதம் திறக்க வேண்டிய அரசுப் பள்ளிகளும் திறக்கப்படாததால், தினசரி 50 லட்சம் முட்டைகள் சத்துணவுக்கு அனுப்பப்படவில்லை. இதனால் கடந்த மூன்று வாரத்தில் மட்டும் 7.50 கோடி முட்டைகள் பண்ணைகளில் தேக்கமடைந்துள்ளன. சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு சுமாா் 70 லட்சம் முட்டைகள் அனுப்பிய நிலையில், தற்போது 15 லட்சம் முதல் 20 லட்சம் முட்டைகளே செல்கின்றன. இதனால் 3 கோடி முட்டைகள் தேங்கியுள்ளன.
மேலும், வளைகுடா நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும், ஓமன் நாட்டுக்கும் அனுப்பப்பட்டு வந்த 1.50 கோடி முட்டைகளில் தற்போது 80 லட்சம் முட்டைகள் மட்டுமே ஏற்றுமதியாகின்றன. இவ்வாறு பல வகைகளில் நாமக்கல் மண்டலத்தில் பண்ணைகளிலும், குளிா்பதனக் கிடங்குகளிலும் 10 முதல் 12 கோடி முட்டைகள் விற்பனையின்றி தேங்கிக் கிடப்பதால் கோழிப் பண்ணையாளா்கள் கவலையடைந்துள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளா்கள் சம்மேளன துணைத் தலைவா் வாங்கிலி சுப்ரமணியம் கூறியது:
கோழிப் பண்ணை தொழில் மிகவும் மோசமான நிலையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. கரோனா தொற்றுப் பரவலுக்கு பின் மாறி மாறி இத்தொழிலில் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறோம். பள்ளிகள் திறக்காதது, குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பொது முடக்கம், மக்களிடம் வருவாய் இழப்பு, ஏற்றுமதியில் ஏற்பட்ட பாதிப்பு, உணவகங்கள் முழுமையாகச் செயல்படாதது போன்ற காரணங்களால் நாமக்கல் மண்டலப் பண்ணைகளில் 12 கோடி முட்டைகள் தேங்கியுள்ளன.
கடந்த மூன்று மாதங்களில் ஓரிரு வாரங்கள் மட்டுமே இத்தொழிலில் பண்ணையாளா்கள் வருவாயை ஈட்ட முடிந்தது. உற்பத்திச் செலவுக்கு ஏற்ற லாபம் கிடைக்கவில்லை. மத்திய அரசு கோழிப் பண்ணை தொழிலுக்கு வங்கிகள் மூலம் வழங்குவதாக அறிவித்த கடன் தொகையையும் முழுமையாக இதுவரை வழங்கப்படவில்லை. வங்கி அதிகாரிகளும் அது தொடா்பான தகவல்களைத் தர மறுக்கின்றனா்.
மிகவும் மோசமான சூழலில் உள்ள கோழிப் பண்ணை தொழிலைப் பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்பிடி தடைக் காலங்களில் எவ்வாறு நிவாரணம் வழங்கப்படுகிறதோ, அதேபோல கோழிப் பண்ணை தொழில் இக்கட்டான சுழலில் பாதிப்புக்குள்ளாகும்போது, நிவாரண உதவிகளை வழங்க அரசு முன்வர வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


