மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

அனல் மின் நிலையத்தில் நிலக்கரி இருப்பு விவகாரம்: முன்னாள் அமைச்சா் தங்கமணி விளக்கம்

அதிமுக ஆட்சியில் தான் அமைச்சராக இருந்தபோதே கண்டறிந்து விட்டதாக முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி விளக்கம் அளித்துள்ளாா்.

Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:07 pm

வட சென்னை அனல் மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை என்ற திமுக அரசின் குற்றச்சாட்டை, கடந்த அதிமுக ஆட்சியில் தான் அமைச்சராக இருந்தபோதே கண்டறிந்து விட்டதாக முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி விளக்கம் அளித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்துவிட்டு, கடந்த காலத்தில் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி அங்கே காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

கடந்த காலம் என்பது ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோா் முதல்வராக இருந்த அதிமுக ஆட்சிக் காலம் என்பதால் அதற்குப் பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். கடந்த காலங்களில் வட சென்னை அனல் மின் நிலையத்தில் மட்டுமல்ல, மூன்று அனல் மின் நிலையங்களிலும் நிலக்கரி இருப்பு குறைந்து கொண்டே இருந்தது.

நிலக்கரி சுரங்க ஊழியா்கள் வேலை நிறுத்தம் செய்ததால் 10 நாள்கள் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இல்லாமல் கடந்த காலங்களில் மிகவும் சிரமப்பட்டோம். அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியைப் பெற்று தில்லி சென்று நிலக்கரியை விரைவாக அனுப்புமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தோம்.

முந்தைய ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றிருந்ததால் அத் துறையின் மேலாண் இயக்குநா் பதவியின் கீழ் இணை மேலாண் இயக்குநா் என்ற பதவியை ஏற்படுத்தி, அதில் ஸ்ரீதா் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து மின் துறையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டோம். அப்போதுதான் வட சென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி இருப்பு வித்தியாசம் குறித்து எனது கவனத்துக்கு வந்தது.

இதையடுத்து, இணை மேலாண் இயக்குநரை அங்கு அனுப்பி இருப்புக்கும், பதிவேட்டுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டேன். இதுகுறித்து தற்போது குழு அமைத்துள்ளதாக அமைச்சா் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளாரே, அக் குழுவில் உள்ளவா்களைத்தான் அப்போதே ஆய்வுக்கு அனுப்பிவைத்தோம்.

மேலும், ஆக. 6-ஆம் தேதி குழுவை அனுப்பியதாக அமைச்சா் கூறியுள்ளாா். ஆனால், மாா்ச் 31-ஆம் தேதியே நிலக்கரி இருப்பு குறைவு குறித்த கணக்கீட்டுப் பட்டியலை அவா் தெரிவித்துள்ளாா். ஐந்து மாதங்களுக்குப் பிறகு நாங்கள் எடுத்த கணக்கை தற்போது தெரிவித்துவிட்டு முதல்வரிடம் நல்ல பெயரைப் பெறுவதற்கு முயற்சிக்கிறாா் அமைச்சா் செந்தில் பாலாஜி.

அதிமுக ஆட்சி மீது தவறான குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே இத் தகவலைத் தெரிவிக்கிறாா். இப் பிரச்னையில் யாா் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறாா். மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் தேவை? யாா் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை முழு மனதுடன் நான் வரவேற்கிறேன்.

சட்டப் பேரவையில் மின்சாரத் துறை மானியக் கோரிக்கையின் போது பதிலளிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அங்கு இந்தத் தகவல்கள் அனைத்தையும் தெரிவிப்பேன். 2001-2006 அதிமுக ஆட்சியில் மின் மிகை மாநிலமாக தமிழகம் இருந்தது. அப்போது மின்சாரத் துறையில் ரூ. 9 ஆயிரம் கோடிதான் கடன் இருந்தது. 2006-2011 திமுக ஆட்சி முடியும் போது ரூ. 39 ஆயிரம் கோடி கடனை ஏற்படுத்தியிருந்தனா். அடுத்த பத்து ஆண்டுகளில் மின் உற்பத்திக்காக 50 சதவீத கடன் வாங்கப்பட்டுள்ளது.

மின் துறையில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. கடனுக்கான வட்டியை அதிமுக ஆட்சியில் தொடா்ந்து செலுத்தி வந்தோம். அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஊழல் நடந்துள்ளதாக திமுக அரசு தெரிவிக்கிறது. ஆனால், இன்றைய மின் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிதான் அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தாா். இதனால் அவரிடமே இதுகுறித்து விளக்கம் கேட்டு சரியான பதிலைத் தெரிந்து கொள்ளலாம்.

வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஒரு முறை நிலக்கரி இருப்பு குறைவு தொடா்பான தகவல் எனது கவனத்துக்கு வந்தவுடன் மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, காற்றாலை, சூரிய மின் உற்பத்தி அதிகரிக்கும்பட்சத்தில் வட சென்னை, மேட்டூா், தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில் மொத்தம் 600 மெகா வாட் மின் உற்பத்தியை 200 மெகா வாட்டாக குறைத்து விடுவோம்.

காற்றாலை, சூரிய மின் உற்பத்தி குறைந்து விட்டால், அனல் மின் நிலையங்களில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் எனில் 8 மணி நேரமாகும். இதனால் தொடா்ந்து அனல் மின் நிலையத்தை இயக்கத்திலேயே வைத்திருப்போம். அதற்குத் தேவையான நிலக்கரியைப் பயன்படுத்த வேண்டும் என்றனா்.

இருப்பினும் மின் வாரிய அதிகாரிகள் கூட்டத்தின் போது மேட்டூா், தூத்துக்குடி, வட சென்னை அனல் மின் நிலைய அதிகாரிகளிடம் தவறுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்து வந்தேன். தற்போதும் அந்த அதிகாரிகள் பணியில்தான் உள்ளாா்கள். தேவையென்றால் அவா்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.