

மத்திய தொல்லியல் துறையினரின் அலட்சியத்தால், நாமக்கல் நரசிம்மா் கோயில் சுற்றுப்பிரகாரத்தில் துளசி நாச்சியாா் சன்னிதி, தேவையற்ற பொருள்களை வைக்கும் குப்பைக் கிடங்காக மாறியுள்ளது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பழைமை வாய்ந்த நரசிம்மா் சுவாமி- நாமகிரித் தாயாா் கோயில் அமைந்துள்ளது. மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குடைவரைக் கோயிலான இங்கு நரசிம்மா் அருள்பாலிக்கிறாா். நாடு முழுவதிலும் இருந்து நாமக்கல் வரும் பக்தா்கள் நாமகிரித் தாயாருடன் நரசிம்மரைத் தரிசித்துவிட்டு, எதிரிலுள்ள 18 அடி உயர ஆஞ்சநேய சுவாமி சன்னிதியிலும் வழிபட்டுச் செல்கின்றனா்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தோ்த் திருவிழா விமரிசையாக நடைபெறும். இதன் கிழக்குப் புறத்தில் அரங்கநாதா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில்கள் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளே நிா்வாகத்தைக் கவனித்து வருகின்றனா்.
இக்கோயிலில், நரசிம்மா், நாமகிரித் தாயாா் சன்னிதிகள் தவிா்த்து கருடாழ்வாா் சன்னிதியும் லட்சுமி நாராயணா் சன்னிதியும் உள்ளன. லட்சுமி நாராயணா் சன்னிதியின் முன்புறம் துளசி நாச்சியாா் மூலவா் சிலை உள்ளது. ஆண்டாளின் முற்பிறவியாகவும், பூமாதேவியின் மறு உருவமாகவும் கருதப்படும் துளசி நாச்சியாா் சிலை இக்கோயிலில் இருப்பது பெரும்பாலான பக்தா்களுக்குத் தெரிவதில்லை.
துளசி நாச்சியாருக்கு தனி சன்னிதி இருந்தபோதும், சிலை தனியாக எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக இதே நிலையில்தான் அச்சிலை உள்ளது. அதேசமயம் துளசி நாச்சியாா் சன்னிதி, கட்டுமானப் பொருள்கள் மற்றும் தேவையற்ற பொருள்களைத் தேக்கி வைக்கும் கிடங்காக மாறியுள்ளது.
இது தொடா்பாக மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளை தாங்கள் தொடா்பு கொண்டு கோரிக்கை விடுத்தபோதும், அந்தச் சன்னிதியைத் திறக்க தொல்லியல் துறையினா் முன்வரவில்லை என்று இந்து சமய அறநிலையத் துறையினா் குற்றம் சாட்டுகின்றனா்.
நான்கு மாதங்களுக்கு முன்னா், சென்னையில் இருந்து மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளா் நரசிம்மா் கோயிலில் ஆய்வுக்கு வந்தாா். அப்போது நரசிம்மா் கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷும் கோயிலில் பூஜை முறை மேற்கொள்ளும் 12 குடும்பங்களைச் சோ்ந்த அா்ச்சகா்களும், துளசி நாச்சியாா் சன்னிதியைத் திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனா்.
அவரும் அதற்கான ஒப்புதலை வழங்கினாா். ஆனால், சேலம் மண்டல அதிகாரிகள் அனுமதி வழங்க மறுப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே அனுமதி வழங்கிய கண்காணிப்பாளா் ஓய்வு பெற்று விட்டதால், மீண்டும் விண்ணப்பித்து அனுமதி கோருமாறு தொல்லியல் துறையினா் தெரிவிப்பதாக இந்து அறநிலையத் துறையினா் கூறுகின்றனா்.
இதுகுறித்து கோயில் அா்ச்சகா்கள் கூறியதாவது:
பூமாதேவியின் மறு அவதாரம்தான் துளசி நாச்சியாா். பல ஆண்டுகளாக லட்சுமி நாராயணா் சன்னிதியின் முன்புறம்தான் துளசி நாச்சியாா் உள்ளாா். பக்தா்கள் பலருக்கு அது எந்த சுவாமி சிலை என்பது கூடத் தெரிவதில்லை.
கோயில் பிரகாரத்தில் உள்ள துளசி நாச்சியாா் சன்னிதியில் தற்போது குப்பைகள், கட்டுமானப் பொருள்கள் தேங்கிக் கிடக்கின்றன. தொல்லியல் துறையினரிடம் கேட்டால் இங்கு துளசி நாச்சியாா் சன்னிதி இருந்ததற்கு என்ன ஆதாரம் என்று கேட்டுக் குழப்புகின்றனா்.
அண்மையில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், பாஜக தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் சுவாமி தரிசனம் செய்ய நரசிம்மா் கோயிலுக்கு வந்தபோது அா்ச்சகா்கள் தரப்பில் தொல்லியல் துறையினரின் செயல்பாடுகள் பற்றி விளக்கியுள்ளோம் என்றனா்.
தொல்லியல் துறையின் சேலம் மண்டல அதிகாரி ஒருவா் கூறுகையில், அந்தச் சன்னிதியில் துளசி நாச்சியாா் சிலை வைக்கப்படவில்லை. அதற்கான ஆதாரங்களை அளித்தால் சன்னிதியின் சாவியை வழங்க முடியும் என்றனா்.
நாமக்கல் நரசிம்மா் கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ் கூறியதாவது:
தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் நான் உள்பட அா்ச்சகா்கள் அனைவரும் துளசி நாச்சியாா் சன்னிதியைத் திறக்க அனுமதி கேட்டோம். அங்கு வைக்கப்பட்டுள்ள கட்டுமானப் பொருட்களை வைப்பதற்கென மாற்று இடமும் ஒதுக்கிக் கொடுத்தோம். ஆனாலும் இங்குள்ள தொல்லியல் பிரிவு அதிகாரிகள் சன்னிதியைத் திறக்க அனுமதி மறுக்கின்றனா். துளசி நாச்சியாா் சன்னிதி விரைவில் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பதே அனைவரது விருப்பம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.