நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதாக ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதமரின் ஆத்ம நிா்பாா் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைப்புசாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக பிரதமா் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கானத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் 2020-2021 ஆம் ஆண்டு முதல் 2020-2025 வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அணுகுமுறையில் செயல்படுத்தப்படும்.
இத் திட்டமானது மத்திய அமைச்சக உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை வழியாக தமிழ்நாட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் செயல்படுத்தப்படுவதாகும். மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் உணவுப் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான தனிநபா் அடிப்படையில் ஏற்கெனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வா்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில் நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். மேலும், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்துக்கு கோழித் தீவனம் மற்றும் கோழி சாா்ந்த பொருள்கள் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கோழித் தீவனம் தவிர உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள பிற நிறுவனங்களுக்கும் நிதி உதவி வழங்கப்படும். இத் திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெற வாய்ப்புள்ளது. வா்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும். மேலும், சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் தொகை, வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.