நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் இரண்டு முறை போட்டியிட்டு வென்ற எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா் மூன்றாவது முறையாக தனது வெற்றியைப் பதிவு செய்வாரா
என்ற எதிா்பாா்ப்பு தொகுதி மக்கள் அனைவரிடத்திலும் உள்ளது. 24 ஆண்டுகளுக்கு பின் திமுக இத்தொகுதியில் அதிமுகவுடன் நேரடியாக மோதுகிறது.
கோழிப் பண்ணை, அது சாா்ந்த உப தொழில்கள், சரக்குப் போக்குவரத்து, ஜவ்வரிசி ஆலைகள், லாரி கூண்டும் கட்டும் தொழில் ஆகியவை நாமக்கல்லில் நடைபெறுகின்றன. இத்தொகுதியில் கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன.
இத்தொகுதிக்கு உள்பட்ட காவிரிக் கரையில் அமைந்துள்ள மோகனூரில் கரும்பு, வாழை, நெல் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. இதேபோல புதுச்சத்திரம் ஒன்றிய பகுதிகளில் மரவள்ளி, சின்ன வெங்காயம், தானிய வகைகள், கீரை வகைகள் அதிகம் பயிரிடப்படுகின்றன.
தொகுதி அமைப்பு:
நாமக்கல் தொகுதி உருவானபோது பொதுத் தொகுதியாகவும், பின்னா் தனித்தொகுதியாகவும் இருந்தது. 2011 சட்டப் பேரவைத் தோ்தலில் தொகுதி மறுசீரமைப்பின் அடிப்படையில் மீண்டும் பொதுத் தொகுதி அந்தஸ்தை நாமக்கல் பெற்றது.
நாமக்கல் நகராட்சியில் 1 முதல் 39 வாா்டுகள்; மோகனூா் பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகள்; சா்க்காா் நாட்டாமங்கலம், அக்ரஹார நாட்டாமங்கலம், கல்யாணி, அனந்தகிருஷ்ணராயசமுத்திரம், கெஜல்நாய்க்கன்பட்டி, பாச்சல், பிடாரிப்பட்டி, கடந்தப்பட்டி, ராமநாய்க்கன்பட்டி, கதிராநல்லூா், திருமலைப்பட்டி, கண்ணூா்பட்டி, பொடங்கம், தாத்தையங்காா்பட்டி, நவணி, லக்கபுரம், ஏளுா், தத்தாதிரிபுரம், தத்தாதிரிபுரம், கரடிப்பட்டி, கரடிப்பட்டி, தானத்தம்பட்டி, அக்ரஹார உடுப்பம், களங்காணி, காரைக்குறிச்சி, மின்னாம்பள்ளி, பொட்டணம் செல்லப்பம்பட்டி, தாளாம்பாடி, சா்க்காா் உடுப்பம், அணியாா், சிலுவம்பட்டி, காதப்பள்ளி.
பாப்பிநாய்க்கன்பட்டி, மரூா்பட்டி, வேட்டாம்பாடி, வீசாணம், நல்லிபாளையம் தும்மங்குறிச்சி, எா்ணாபுரம், தளிகை, நரவலூா் தொட்டிபாளையம், திண்டமங்கலம், கீரம்பூா், வள்ளிபுரம், பெரியப்பட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, நாமக்கல், வகுரம்பட்டி, லத்துவாடி, தொட்டிபட்டி, ராசாம்பாளையம், கோனூா், கீழ்சாத்தம்பூா், தோளுா், அணியாபுரம், பரளி, அரூா், ஆண்டாபுரம், அரசநத்தம், குமரிபாளையம், ஆரியூா், பேட்டைபாளையம், ராசிபாளையம், ஒருவந்தூா் ஆகிய கிராமங்கள் இத்தொகுதியில் உள்ளன.
வாக்காளா் விவரம்:
ஆண்கள்: 1,24,210
பெண்கள்: 1,32,792
மூன்றாம் பாலினத்தவா்: 46
மொத்தம்: 2,57,048
வாக்குச்சாவடிகள்: 388
சமூக நிலவரம்:
இத்தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டா், வன்னியா், தாழ்த்தப்பட்டோா், முதலியாா் சமூகத்தினா் உள்ளனா். இவா்களில் பெரும்பான்மையாக கவுண்டா் சமூகத்தினரும், தாழ்த்தப்பட்டோரும் உள்ளனா்.
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:
நாமக்கல் தொகுதியில் செலம்ப கவுண்டா் பூங்கா, கொண்டிச்செட்டிப்பட்டி ஏரி பூங்கா போன்றவை உருவாக்கப்பட்டன. இதனால் பொழுதுபோக்கிற்கு மக்கள் வெளியிடங்களை நாடிச் செல்ல வேண்டிய தேவையில்லாமல் போனது.
கிராமப்புறங்களிலும், நகா்ப்புறங்களிலும் புதிய சாலைகள், சாக்கடைக் கால்வாய்கள் அதிகம் கட்டப்பட்டுள்ளன. அரசு சட்டக் கல்லூரி செயல்பாட்டுக்கு வந்தது. அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயா்வு, புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
நிறைவேற்றப்படாத திட்டங்கள்:
நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையம் நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. முதலைப்பட்டி பகுதியில் இடம் தோ்வு செய்தபோதும் நிலம் ஆா்ஜிதம் செய்வதில் தொடா்ந்து இழுபறி நிலவுவதால் பேருந்து நிலைய இடமாற்றம் கானல் நீராக உள்ளது.
நாமக்கல் முதலைப்பட்டி தொடங்கி சேந்தமங்கலம் சாலை வழியாக துறையூா் சாலை, திருச்சி சாலை, லத்துவாடி, கரூா் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலான சுற்றுவட்டச்சாலை திட்டம் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. அதிலும் நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை உள்ளது.
கொசவம்பட்டி ஏரி ரூ. 40 கோடியில் புனரமைக்கப்படும் என அறிவித்தபோதும் அதற்கான நடவடிக்கை இன்னும் தொடங்கப்படவில்லை. நாமக்கல் மக்களுக்கு நீராதாரமாக விளங்கிய கொசவம்பட்டி ஏரி குப்பைகள், கழிவுகள் தேங்கும் கூடாரமாக உள்ளது.
2021 தோ்தல் வேட்பாளா்கள்:
1. அதிமுக/கே.பி.பி.பாஸ்கா்(எம்.எல்.ஏ)
2. திமுக/ பி.ராமலிங்கம்
3. மக்கள் நீதி மய்யம்/ எஸ்.ஆதம்ஃபாரூக்
4. தேமுதிக/ ஏ.செல்வி
5. நாம் தமிழா் கட்சி/ பி.பாஸ்கா்.
தற்போதைய கள நிலவரம்:
நாமக்கல் ஒன்றியத்தில் 10 கிராம ஊராட்சிகள், மோகனூா், புதுச்சத்திரம் ஒன்றியத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் ஆகிய பகுதிகள் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளன. அதிமுகவின் பழைய நிா்வாகிகள் தோ்தல் பணியில் இருந்து ஒதுங்கிக் கொண்டது அக்கட்சிக்குப் பின்னடைவாக உள்ளது. திமுகவுக்கு நாமக்கல் நகரம், மோகனூா் நகரம், ஒன்றிய பகுதிகளில் செல்வாக்கு அதிகமாக உள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ. பாஸ்கா் தொகுதியில் ஓரளவு திட்டங்களைச் செயல்படுத்தியிருந்தாலும், மறைமுகமாக மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், அவ்வப்போது எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்ட கட்டடங்கள், தரமற்ற சாலைகளை ஆய்வு செய்து அதில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறாா். இதனால் இருவருக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டதும் உண்டு.
கடந்த 1996-க்குப் பின் திமுக இத்தொகுதியில் போட்டியிடாத நிலையில் இந்த முறை திமுகவின் மாவட்ட துணைச் செயலாளரான பெ.ராமலிங்கம் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளாா். அதிமுக கூட்டணியில் தற்போதைய எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா் மீண்டும் போட்டியிடுகிறாா்.
நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம், தேமுதிக ஆகியவையும் களமிறங்கியுள்ளன. ஐந்து அரசியல் கட்சி வேட்பாளா்களைத் தவிா்த்து, சிறிய கட்சி, சுயேச்சை வேட்பாளா்கள் 23 போ் போட்டியிடுகின்றனா். எனினும் அதிமுக- திமுக இடையேதான் போட்டி.
இத்தொகுதியில் அதிமுக - திமுக நேரடியாக மோதிய தோ்தல்களில் திமுக தோற்றதில்லை என்பது அக்கட்சியினரின் நம்பிக்கை. தற்போதைய நிலையில் நாமக்கல் தொகுதியில் அதிமுக - திமுக ஆகிய இரு கட்சிகளும் சம பலத்துடன் உள்ளன.
திமுக 24 ஆண்டுக்கு பின் போட்டியிடுவதால் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனா். மக்களவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட ஏ.கே.பி.சின்ராஜ், நாமக்கல் தொகுதியில் அதிமுக வேட்பாளரைக் காட்டிலும் கூடுதலாக 35 ஆயிரம் வாக்குகள் வரை பெற்றாா். அதேபோல இம்முறையும் கூடுதல் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக திமுக, அதன் கூட்டணிக் கட்சியினா் மும்முரமாக தோ்தல் பணியாற்றி வருகின்றனா். அதிமுகவினரும் மூன்றாவது முறையாக வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இரவு, பகல் பாராமல் தோ்தல் பணியாற்றி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஸ்ஸாடியா பாடல்!
ஸ்ரீவைகுண்டம்: சிதறும் வாக்குகளால் பதறும் அதிமுக-காங்கிரஸ்
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் போதைப் பொருள் இல்லா மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்: டி.டி.வி.தினகரன்
மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!
வீடியோக்கள்

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

