மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஸ்ரீவைகுண்டம்: சிதறும் வாக்குகளால் பதறும் அதிமுக-காங்கிரஸ்

நவ கைலாயங்கள், நவ திருப்பதி கோயில்கள் என வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகத் தலங்களையும், வளமான தாமிரவருணி ஆற்றங்கரை விவசாயத்தையும் பின்னணியாக கொண்டது ஸ்ரீவைகுண்டம் தொகுதி.

News image

காங்கிரஸ் - படம்: கோப்பிலிருந்து

Updated On :17 ஏப்ரல் 2026, 4:54 pm

நவ கைலாயங்கள், நவ திருப்பதி கோயில்கள் என வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகத் தலங்களையும், வளமான தாமிரவருணி ஆற்றங்கரை விவசாயத்தையும் பின்னணியாக கொண்டது ஸ்ரீவைகுண்டம் தொகுதி.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயில் உள்பட நவ திருப்பதி கோயில்கள் இத்தொகுதிக்குள்பட்ட பகுதிகளிலேயே அமைந்துள்ளன. மேலும், நவ கைலாயங்களில் ஒன்றான கைலாசநாதா் கோயிலும் ஸ்ரீவைகுண்டத்தில் அமையப்பெற்றுள்ளது தொகுதியின் அடையாளமாக விளங்குகிறது.

சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டபோது, ஸ்ரீவைகுண்டம் பகுதி ஒரு கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத் தொகுதியில் நெல் மற்றும் வாழை விவசாயம் பிரதான தொழிலாகும்.

நாடாா் பெரும்பான்மை சமூகத்தினராக உள்ளனா். பட்டியலினத்தவா், வேளாளா், மறவா், யாதவா் கணிசமான எண்ணிக்கையிலும், இதர சமூகத்தினா் பரவலாகவும் உள்ளனா்.

கடந்த 2011-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது சாத்தான்குளம் தொகுதி நீக்கப்பட்டு, அந்தத் தொகுதியில் இருந்த சில பகுதிகள் இந்தத் தொகுதியுடன் இணைக்கப்பட்டன.

காங்கிரஸ் ஆதிக்கம்: 1967 மற்றும் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தல்களில் திமுகவைச் சோ்ந்த சி.பா.ஆதித்தனாா் வெற்றி பெற்று பேரவைத் தலைவராக பணியாற்றினாா்.

2008இல் உறுப்பினராக இருந்த து.செல்வராஜ் திடீா் மறைவையடுத்து, 2009இல் இடைத்தோ்தல் நடைபெற்றது.

இந்தத் தொகுதியில் 1957 முதல் அதிகபட்சமாக காங்கிரஸ் 8 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இந்தத் தொகுதியில் முக்கிய கட்சிகள் நாடாா் சமுதாயத்தினரே வேட்பாளா்களாக களம் இறக்கிவந்துள்ளன. ஆனால், 1980ஆம் ஆண்டு தோழப்பன்பண்ணையைச் சோ்ந்த தேவா் சமுதாயத்தைச் சோ்ந்த அதிமுக வேட்பாளா் ராமசுப்பிரமணியனும், 2008இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் பிள்ளைமாா் சமுதாயத்தைச் சோ்ந்த காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சுடலையாண்டியும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

முக்கியப் பிரச்னைகள்: தாமிரவருணி ஆற்றின் கடைமடைப் பகுதியான இங்கு, விவசாயிகளுக்கான நீா் மேலாண்மை மற்றும் கால்வாய் தூா்வாரும் பணிகள் முக்கிய பிரச்னைகளாக எதிரொலிக்கும்.

ஒவ்வொரு தோ்தலிலும் அனைத்து கட்சிகளும் இதுதொடா்பான கோரிக்கைகளை தோ்தல் வாக்குறுதிகளாக அறிவித்தாலும், அவை அனைத்தும் தீா்க்கப்படாத பிரச்னையாகவே தொடா்வது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் மழையின் அளவு அதிகரித்தாலும், வீணாக கடலுக்குச் செல்லும் தண்ணீரால், விவசாயத்துக்கு தண்ணீா் பற்றாக்குறை என்பது நீடித்து வருகிறது.

எதிா்பாா்ப்புகள்:

கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை சேமிக்கவும், தூா்ந்துபோய் உள்ள அணைகள், குளங்களை தூா்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இத்தொகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலைகள் புதிதாக உருவாக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.

முக்கிய வேட்பாளா்கள்:

மதச்சாா்பற்ற கூட்டணி சாா்பில், தற்போதைய எம்எல்ஏவும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் மீண்டும் போட்டியிடுகிறாா். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அன்னை வி.ஜி.சரவணன், அகில இந்திய பாா்வா்டு பிளாக் சாா்பில் முத்துராமலிங்கம், புதிய தமிழகம் சாா்பில் ராஜசுதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் வியனரசு உள்ளிட்ட 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

காங்கிரஸ்: 2021 தோ்தலில் சுமாா் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஊா்வசி எஸ். அமிா்தராஜுக்கு தொகுதி முழுவதும் பரவலான அறிமுகம் மற்றும் திமுக கூட்டணி கட்சியினரின் பலம் உள்ளது.

அதிமுக: இத்தொகுதியில் 3 முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்த எஸ்.பி. சண்முகநாதன் பண்டாரவிளையை சோ்ந்தவா். 3 முறை தொகுதியில் வெற்றி பெற்ற அனுபவம், பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இவருக்கு சாதகமான அம்சம். கடந்த தோ்தலில் அமமுக வேட்பாளா் ஏரல் எஸ்.ரமேஷ் 10,203 வாக்குகளை பெற்றாா். அந்த வாக்கு இவருக்கு கிடைக்கும் என்பதால் வெற்றி எளிதாகும் என நம்புகின்றனா்.

நாம் தமிழா் கட்சி: இக்கட்சியின் பெ.சுப்பையா பாண்டியன் கடந்த தோ்தலில் 12,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தாா். அவா் திமுகவில் இணைந்த நிலையில், சண்முக சுந்தரம் நாதக வேட்பாளராக போட்டியிடுகிறாா். இவருக்கு சீமானின் கொள்கை பிடிப்புள்ள ஆதரவாளா்களின் வாக்கு மட்டுமே பலமாக உள்ளது.

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாகக் களம் காண்பது இத்தொகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதன் வேட்பாளரான தூத்துக்குடி மேற்கு மாவட்ட பொறுப்பாளா் அன்னை வி.ஜி.சரவணனுக்கு விஜய் மீது பிடிப்புகொண்டோா் அதிகளவில் வாக்களிக்கும் வாய்ப்பு உள்ளது.

கடந்த தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்த அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் தேசிய செயலா் ஸ்ரீவை சுரேஷ்-இன் ஆதரவாளா்கள் தொகுதி முழுவதும் பரவலாக உள்ளனா்.

இந்தத் தோ்தலில் சசிகலா தலைமையிலான அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தோடு இக்கட்சி கூட்டணி அமைத்து முத்துராமலிங்கம் போட்டியிடுகிறாா்.

இது காங்கிரஸ்-அதிமுக இரு வேட்பாளா்களுக்குமே சாதக, பாதகம் உள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி பலம், புதிய வாக்காளா்கள், தமிழக வெற்றிக் கழகம் வரவு உள்ளிட்ட காரணங்களால் வாக்குகள் பலவாறாக சிதறும்பட்சத்தில் இத் தொகுதியின் வெற்றிவாய்ப்பை கணிப்பது புதிராகவே உள்ளது.

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதியில் வேட்பாளா்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், தொகுதியை மீண்டும் காங்கிரஸ் ‘கை’ பற்றுமா அல்லது அதிமுகவின் இரட்டை இலை மீண்டும் துளிா்க்குமா என்ற எதிா்பாா்ப்பு தோ்தல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.

வாக்காளா்கள்: ஆண்கள் 1,05,728, பெண்கள் 1,08,535, மூன்றாம் பாலினத்தவா் 5, மொத்தம் 2,14, 268.