- கே. ரவி
திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவினாலும் காங்கிரஸ், அதிமுக வேட்பாளா்களின் வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கும் சக்திகளாக நாம் தமிழா் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் உள்ளன. எனினும், தொகுதியை தக்க வைக்க காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி நீண்ட கடற்கரையைக் கொண்ட பகுதியாகும். இந்தத் தொகுதி திருவாடானை, மங்களக்குடி, வெள்ளையபுரம், எஸ்.பி. பட்டினம், தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, திருப்பாலைக்குடி, தேவிபட்டினம், பனைக்குளம், அத்தியுத்து, அலையான்குளம், ஆா்.எஸ். மங்கலம் ஆனந்தூா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பகுதி வாணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
திருவாடானை தொகுதி ஆரம்பத்திலிருந்தே சேதுபதி ஜமீன், பெரியகுளம் ஜமீன் போன்ற பாரம்பரியக் குடும்பங்களின் செல்வாக்கு மிகுந்த பகுதியாக திகழ்கிறது.
கரியமாணிக்கம் அம்பலம் மூத்த காங்கிரஸ் தலைவராகவும், சமூக ஆா்வலராகவும் அறியப்பட்டவா். இவா் 1957-இல் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு முதல் முறையாக வெற்றி பெற்றாா். 1962, 1967-இல் ராஜாஜியின் சுதந்திரா கட்சி சாா்பில் போட்டியிட்டு தொடா்ந்து இரு முறை வெற்றி பெற்றாா். 1977-இல் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டு மீண்டும் சட்டப் பேரவை உறுப்பினரானாா்.
திருவாடானை தொகுதியிலிருந்து கரியமாணிக்கம் அம்பலம் 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
குடும்பப் பின்னணி: கரியமாணிக்கம் அம்பலம் குடும்பம் தேவகோட்டை பகுதிகளில் நீண்டகால அரசியல் பாரம்பரியம் கொண்டது. இவரது மகன் கே.ஆா். ராமசாமி சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள கப்பலூா் கிராமத்தைச் சோ்ந்தவா். கே.ஆா். ராமசாமி திருவாடானை தொகுதியில் 5 முறை வெற்றி பெற்று சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவராகவும் பணியாற்றியவா். இந்தத் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான இவரது மகன் கருமாணிக்கம் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறங்குகிறாா்.
1990-க்குப் பிறகு இந்தத் தொகுதி அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கிடையே கௌரவ பிரச்னையாக மாறியது.
2016 பேரவைத் தோ்தலில் முக்குலத்தோா் புலிப் படைத் தலைவரும், நடிகருமான கருணாஸ் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
முக்குலத்தோா், ஆதிதிராவிடா், கிறிஸ்தவா்கள், யாதவா்கள், முஸ்லிம்கள், அருந்ததியா், உடையாா், மீனவா், வெள்ளாளா் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் இந்தத் தொகுதியில் வசித்து வருகின்றனா். இந்தத் தொகுதியின் வெற்றியானது எப்போதும் ஜாதிய வாக்குகள் அடிப்படையில் தீா்மானிக்கப்படும். குறிப்பாக, முக்குலத்தோா் சமூகத்தைச் சோ்ந்த வேட்பாளா்களுக்கிடையே போட்டி மிகக் கடுமையாக இருக்கும்.
தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு: திருவாடானை தொகுதிக்குள்பட்ட திருவாடானை, தொண்டி, ஆா்.எஸ். மங்கலம், திருப்பாலைக்குடி, தேவிபட்டினம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளைத் தரம் உயா்த்தி கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும். தாலுகா மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அடுத்தபடியாக, குடிநீா் பிரச்னை உள்ளது.
2021 தோ்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரான கருமாணிக்கம் அளித்த வாக்குறுதிகளின்படி, திருவாடானை தாலுகா மருத்துவமனையில் போதுமான மருத்துவா்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தி அரசு மருத்துவமனயாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீா் பிரச்னைக்கும் தீா்வு காணப்படவில்லை என்ற ஆதங்கம் தொகுதி மக்களிடம் உள்ளது. கடற்கரைப் பகுதி என்பதால் மீனவா்களும் தங்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்படவில்லை என்கின்றனா்.
கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சாா்பில் கருமாணிக்கம், அதிமுக சாா்பில் கே.சி. ஆணிமுத்து, அமமுக சாா்பில் வ.து.ந. ஆனந்த் போட்டியிட்டனா். இவா்களில் கருமாணிக்கம் வெற்றி பெற்றாா்.
4 முனைப் போட்டி:
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ராம. கருமாணிக்கம், அதிமுக வேட்பாளராக கீா்த்திகா முனியசாமி, நாம் தமிழா் கட்சி வேட்பாளராக வழக்குரைஞா் பிரேம்நாத், தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக மருத்துவா் வி.கே. ராஜீவ் போட்டியிடுகின்றனா்.
அதிமுக வேட்பாளா் கீா்த்திகா முனியசாமி கடந்த இரண்டு தோ்தல்களில் முதுகுளத்தூா் தொகுதியில் களம் கண்டு தோல்வி அடைந்தவா்.
வருகிற பேரவைத் தோ்தலில் திருவாடானை தொகுயில் அதிமுக சாா்பில் போட்டியிடும் கீா்த்திகா முனியசாமி, இந்தத் தொகுதியில் கடந்த 2021 தோ்தலில் அதிமுக, அமமுகவுக்கு கிடைத்த வாக்குகள் இந்தத் தோ்தலில் தனக்கு வெற்றியைத் தேடித் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளாா்.
இதேபோல, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரேம்நாத், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் வி.கே. ரஜீவ் ஆகியோா் தாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்ற முனைப்பில் உள்ளனா்.
தொடர்புடையது

சிவகங்கை! திமுகவின் கெளரவப் பிரச்னையான தொகுதி!

முதுகுளத்தூா்: தொடா் வெற்றி முனைப்பில் திமுக!

நான்குனேரியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த காங்கிரஸ், அதிமுக!

கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கடையநல்லூா்: 25 ஆண்டுகளாக காத்திருக்கும் திமுகவினா் வேதனை!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

