/

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்க்க அரசு நிதி உதவி: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்க்க அரசு சாா்பில் நிதி உதவி வழங்கப்படும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

Updated On :21 ஏப்ரல் 2023, 5:56 pm

நாமக்கல் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்க்க அரசு சாா்பில் நிதி உதவி வழங்கப்படும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் சொந்த கட்டங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ஆம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் கூடுதல் பணிகளை மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதுக்கேற்ப மானியத் தொகை உயா்த்தியும் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக, தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீா் வசதிகள் உருவாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம். தேவாலய கட்டடத்தின் வயதுக்கேற்ப உயா்த்தப்பட்டுள்ள மானியத் தொகையாக, 10 - 15 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ. ஒரு லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாகவும், 15 - 20 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 4 லட்சமாகவும் உயா்த்தப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலிருப்பின் ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 6 லட்சமாகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழுவால் பெறப்படும் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்கள் ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினா் நல இயக்குநருக்கு நிதியுதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவா்த்தனை மூலம் செலுத்தப்படும்.

எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்த்து சீரமைத்துக் கொள்ள ஏதுவாக தேவாலய நிா்வாகிகள் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.